twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நேபாளி'யில் போலீஸாரை இழிவுபடுத்தும் காட்சிகள் 'கட்' ஆகின்றன!

    By Staff
    |

    Bharath with Meera Jasmine
    சென்னை: நேபாளி படத்தில் போலீஸாரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் வைத்ததற்காக அதன் இயக்குர் வி.இசட். துரை, சென்னை மாநகர இணை ஆணையர் ரவியை சந்தித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் அந்தக் காட்சிகளை நீக்கவும் ஒப்புக் கொண்டார்.

    பரத், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள நேபாளி படத்தில் காவல்துறையினரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகளை வைத்ததற்கு கண்டனம் தெரிவித்த வட சென்னை இணை ஆணையர் ரவி, அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

    இதையடுத்து நேற்று ரவியை, படத்தின் இயக்குநர் துரை சந்தித்துப் பேசினார். அப்போது போலீஸாரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். மேலும் அந்தக் காட்சிகளை நீக்கி விடுவதாகவும் அவர் ஒத்துக் கொண்டார்.

    இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஜட்டியுடன் வருவதுபோன்ற காட்சி போலீசை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. இந்த காட்சியை நீக்குவதற்கு டைரக்டர் துரை சம்மதம் தெரிவித்துள்ளார்.

    அதேபோல போலீசை அவமதித்து பேசும் சில வசனங்களையும் நீக்க உறுதி அளித்துள்ளார். ஜெயில் வார்டர் போதையில் வருவது போன்ற காட்சியையும் நீக்க அவர் சம்மதித்துள்ளார். இந்த காட்சிகளை 2 நாட்களில் நீக்கிவிட்டு புதிய பிரிண்ட் எடுக்கப்பட்டு, நேபாளி படம் திரையிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் துரையின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது.

    முதன் முறையாக போலீஸ் தலையிட்டு, போலீஸ் அவமதிப்பு காட்சிகள் திரைப்படத்தில் நீக்கப்பட்டுள்ளன. இதுபோல் அவமதிப்பு காட்சிகள் எடுக்கும் திரைப்பட டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

    சினிமா தவிர டி.வி. தொடர்களிலும் போலீசை அவமதிக்கும் காட்சிகளை காட்டக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு காட்டினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ரவி.

    இப்படி ஒரு கடிவாளம் சினிமாவுக்கும், டிவிக்கும் கண்டிப்பாக தேவைதான். குறிப்பாக டிவி தொடர்களில் தங்களது இஷ்டத்திற்குக் காட்சிகளை வைக்கின்றனர். கள்ளத் தொடர்புகள், முறையற்ற உறவுகள் உள்ளிட்ட செக்ஸ் வக்கிரங்கள் நிறைந்த தொடர்கள் டிவிகளில் அதிக அளவில் உலா வருகின்றன.

    சராசரியாக ஒவ்வொரு தொடரிலும் ஒரு முறையற்ற உறவுக் காட்சிகள் தவறாமல் இடம் பெறுகின்றன. இப்படிப்பட்ட போக்குக்கும் தடை விதிக்கப்பட்டால் குடும்பங்கள் நிம்மதியுடன் டிவியைப் பார்க்க முடியும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X