காதலனை போராடி மணந்த துணை நடிகை பூஜா!

இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் பூஜா.
சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம், பொன்னி நகரை சேர்ந்தவர் பூஜா (வயது 24). சினிமா துணை நடிகையான இவர், சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஒரு படப்பிடிப்புக்காகச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் செய்திருந்தார் பூஜாவின் தாயார்.
வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஜெகன் என்ற ஆட்டோ டிரைவரை பூஜா காதலித்ததாகவும், அவரோடு படப்பிடிப்பில் இருந்து சென்று விட்டதாகவும் தெரிய வந்தது.
இச்செய்தி பரவியதும் ஜெகன் மட்டும் வளசரவாக்கம் போலீசில் சரண் அடைந்தார். பூஜாவுடன் ஜாலியாக இருக்க புதுக்கோட்டைக்குச் சென்றதாகவும், இனி பிரிந்துவிடுவதாகவும் போலீசாரிடம் ஜெகன் தெரிவித்தார்.
பூஜாவை புதுக்கோட்டையில் இருந்து போலீசார் சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தனர் போலீசார்.
காதலன் ஏற்றுக்கொள்ளாததால் பூஜா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். காதலன் ஏற்றுக்கொள்ளும் வரை நான் தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
திடீர் திருமணம்!
இதற்கிடையில் நேற்று காலையில் பூஜா தனது காதலன் ஜெகனோடு பெரியபாளையம் கோவிலுக்கு சென்றார். அங்கு இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆரணியில் உள்ள பதிவு அலுவலகத்தில் முறைப்படி திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
நேற்று இரவு பூஜா தனது காதல் கணவரோடு எழும்பூர் கோர்ட்டுக்கு வந்தார். அங்கு தனது வழக்கறிஞர் ஞானத்தை சந்தித்து பேசினார்.
காதலனை திருமணம் செய்து கொண்ட விஷயம் முறைப்படி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. "ஏழு ஆண்டுகள் காதலித்தோம். இப்போதுதான் கைகூடி இருக்கிறது. பெரும்போராட்டத்துக்குப் பிறகே ஜெகனைக் கைப்பிடித்தேன். இன்றுதான் எனக்கு முழுமையான வாழ்க்கை கிடைத்துள்ளது. இந்த வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பேன். இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார் பூஜா.


Click it and Unblock the Notifications











