விவாகரத்துக்கு காவ்யா மாதவன் கணவரும் சம்மதம்

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் காவ்யா மாதவன். தமிழில் என் மன வானில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும், கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் நிஷால் சந்திரனுக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் காவ்யா மாதவன், சினிமாவில் நடிக்கவில்லை.
நிஷால் சந்திரன் துபாயில் வேலை பார்த்து வந்தார். எனவே காவ்யா மாதவனும் துபாய் சென்று கணவருடன் குடும்பம் நடத்தினார்.
குடும்ப வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே, இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாலியல் துன்புறுத்தலில் கணவரும் அவர் தம்பியும் ஈடுபட்டதாக போலீஸில் புகார் அளித்த காவ்யா, கேரளா திரும்பி விட்டார். பின்னர் அவர் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கொச்சி குடும்பநல கோர்ட்டில், காவ்யா மாதவன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "எனக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதால், விவாகரத்து வழங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் எர்ணாகுளம் கோர்ட்டிலும் அவர் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் "எனது கணவரும், கணவரின் குடும்பத்தினரும் என்னை கொடுமை படுத்தினார்கள்'' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இது போல, நிஷால் சந்திரன், கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, "என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் காவ்யா மாதவன் எர்ணாகுளம் கோர்ட்டில் தொடர்ந்து இருக்கும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கோரி இருந்தார்.
இந்த நிலையில் காவ்யா மாதவன் குடும்பத்தினரும், நிஷால் சந்திரன் குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து பேசினார்கள். அப்போது இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் அவரவர் தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து காவ்யா மாதவன், நிஷால் சந்திரன் ஆகியோர் தரப்பில் கொச்சி குடும்பநல கோர்ட்டில் தனித்தனியே இரு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. "கோர்ட்டுக்கு வெளியே இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு, சுமூகமாக விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே எங்களுக்கு விவாகரத்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனுக்களை விசாரணைக்கு நீதிபதி ஏற்றுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











