கமல் குரல்-தேவிஸ்ரீபிரசாத் பாராட்டு
கமல்ஹாசனை ஒரு சிறந்த நடிகராக அறிந்த எனக்கு அவரை ஒரு சிறந்த பாடகராகவும் அறியும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது மன்மதன் அம்பு என்று புகழாரம் சூட்டியுள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.
தசாவதாரம் படத்தின் பின்னணி இசையை கவனித்தவர் தேவிஸ்ரீபிரசாத். தற்போது மன்மதன் அம்பு படத்திற்கு முழுக்க இசையமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் சிங்கப்பூரில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து தேவிஸ்ரீபிரசாத் கூறுகையில், கமல்ஹாசனுடன் ஒரு பாடகராக நான் இணைந்து பணியாற்றியது இதுவே முதல் முறை. நான் கமல்ஹாசனின் குரலுக்கு பெரும் ரசிகன். ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் நடிப்புத் திறமைதான் நன்கு தெரியும். ஆனால் ஒரு இசையமைப்பாளராக கமல்ஹாசனின் குரல் மிகவும் சிறப்பானது, தனித்தன்மை வாய்ந்தது என்பதை நான் உணர்வேன்.
அதேசமயம், கமல்ஹாசனின் பாட்டுத்திறமை இன்னும் முழு அளவில் வெளிக் கொண்டு வரப்படவில்லை என்பது எனது எண்ணம். ஒரு பாடகராக மன்மதன் அம்பு படத்தில் நான் கமல்ஹாசனை சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாக உணர்கிறேன்.
தெலுங்கில் நான் நிறைய படங்களில் முழுக்க முழுக்க ரொமான்டிக் பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் பெரும்பாலும் பெப்பி இசையைத்தான் கொடுத்துள்ளேன். அந்த வகையில் முழு நீள ரொமான்டிக் இசையை மன்மதன் அம்பு படத்தில்தான் கொடுத்துள்ளேன் என்கிறார் பிரசாத்.


Click it and Unblock the Notifications











