சிங்கமுத்து ஜாமீன் ரத்தாகிறது?
வடிவேலுவிடம் நில மோசடி, கொலை மிரட்டல் வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நடிகர் சிங்கமுத்து, நிபந்தனைப் படி ஆஜராகாததால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நில மோசடி மூலம் ஏழு கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்படுத்தியதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகர் சிங்கமுத்து மீது, நடிகர் வடிவேலு புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வடிவேலு புகார் கொடுத்தார்.
ஆனால் அந்த புகாரின் அடிப்படையில் சிங்கமுத்துவை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. காரணம், பலமான ஆதரவுடன், தலைமறைவாக இருந்த சிங்கமுத்து உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதுதான்.
இதில் முன் ஜாமீன் வழங்கக்கோரி, நடிகர் சிங்கமுத்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தினமும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சென்னையை விட்டு வெளியில் செல்லும்போது அதுபற்றிய விவரத்தை போலீசில் தெரிவிக்க வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியது.
ஆனால் முன்ஜாமீன் பெற்று 10 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை நடிகர் சிங்கமுத்து நிபந்தனைகளின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திடவில்லை. வெளியூர் சென்றிருப்பதாக எந்த தகவலும் போலீசாருக்கு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிங்கமுத்து ஆஜராகாதது குறித்த விவரங்களை ஐகோர்ட்டில் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், சிங்கமுத்துவுக்கு ஐகோர்ட் வழங்கிய முன் ஜாமீன், ரத்தாக வாய்ப்புள்ளது.
ஏற்கனவே, 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென வடிவேலுவும், 25 கோடியே 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென சிங்கமுத்துவும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











