twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போதை மருந்து கும்பலுடன் தொடர்பா? - த்ரிஷா மறுப்பு

    By Chakra
    |

    Trisha
    ஹைதராபாத்: போதை மருந்து கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய நடிகர் நடிகர்கள் யார் யார் என்று ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலுடன் தொடர்பில்லை என்று நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.

    பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ், இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை கடந்த 19ம் தேதி 'கோகைன்' என்ற போதை பொருள் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.

    அவர்களுக்கு அந்த போதை பொருளை சப்ளை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவர் பிடிபட்டார்.

    நைஜீரியா வாலிபரிடம் இருந்து ஒரு 'லேப் டாப்' கம்ப்iட்டர், செல்போன், 50 ஆயிரம் ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் வந்த சொகுசு கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டதாகவும், நைஜீரியா வாலிபரிடம் போதைப் பொருளை வாங்கி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் பிரமுகர்கள் உள்பட பல முக்கிய புள்ளிகளுக்கும் சப்ளை செய்ததாக ஒத்துக்கொண்டு வாக்கு மூலம் அளித்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் நைஜீரியா வாலிபர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தனக்கு 800 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் 60 பேர் நடிகர் நடிகைகளாம்.

    தனது வாக்குமூலத்தில், 2008ம் ஆண்டு உயர் கல்வி படிப்பதற்காக ஹைதராபாத் நகரத்துக்கு வந்தேன். ஆனால், எனக்கு படிக்க எங்கும் இடம் கிடைக்கவில்லை.

    நான் 'விசிட் விசா'வில் நைஜிரீயாவில் இருந்து வந்திருந்தேன். எனக்கு உயர் படிப்பு படிக்க இடம் கிடைக்காத நிலையில் நான் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டது. விசா காலமும் முடிந்து விட்டது. அதை நீட்டிப்பதற்கும் எனக்கு பணம் இல்லை.

    அப்போது இங்கிருந்த எங்கள் நாட்டைச் சேர்ந்த எதில் என்ற வாலிபருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் போதை பொருளை கொடுத்து சப்ளை செய்யச் சொன்னார். அதில் எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து பின்னர் நானே போதை பொருளை சப்ளை செய்யத் தொடங்கினேன். ஆனால் போலீசாரிடம் பிடிபட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

    நடிகர்-நடிகைகள் தொடர்பு:

    நைஜீரியா வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பை போலீசார் சோதனை செய்தபோது அதில் 800 வாடிக்கையாளர்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தொடர்பான பெயர், விலாசம், தொலைபேசி எண்கள் சிக்கின.

    இந்த 800 பேரில் 60 பேர் பிரபல நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மந்திரிகளின் மகன்கள், எம்.பிக்களின் மகன்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன்கள், பிரபலங்களின் மகள்கள் என்பகிறார்கள்.

    ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், அவர்கள் நேரடியாக போதை பொருள் வாங்கினாலோ, போதைப் பொருளை பயன்படுத்தினாலோதான் அவர்களை கைது செய்யவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும் என்றும் ஹைதராபாத் நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் தெரிவித்தார்.

    ஹைதராபாத் நகரத்துக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படும் 9 மதுபான கேளிக்கை விடுதிகளில் இந்த போதைப் பொருளை அவர்கள் விற்பனை செய்துள்ளதாகவும், பல இளம் பெண்கள் குறிப்பாக நடிகைகள் இதை பயன்படுத்தினால் தங்களது முகம் அதிக பொலிவு பெறுவதாக நம்பி ஏமாந்து இதை பயன்படுத்துவதாகவும், மது மற்றும் குளிர் பானங்களில் கலந்தோ அல்லது சிகரெட்டில் அடைத்து புகைத்தோ இதை பயன்படுத்துவதாகவும் கான் தெரிவித்தார்.

    போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிடிபட்ட இளம் பெண்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தோம் என்றார்.

    கடந்த 40 நாட்களாக இந்த கேளிக்கை விடுதிகளை கண்காணித்தோம். அப்போது போதை பொருள் சப்ளை செய்ததாக 4 குழுக்களை பிடித்தோம். ஆனால், முதன் முறையாக நடிகர் ரவி தேஜாவின் தம்பிகள் சில நாட்களுக்கு முன்னர் பிடிபட்டனர். தனிப்படை அமைத்து கேளிக்கை விடுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கான் தெரிவித்தார்.

    நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ள ரவி தேஜாவின் தம்பிகளிடமும், நைஜீரியா வாலிபரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    த்ரிஷா மறுப்பு:

    இதற்கிடையே பிரபல தமிழ்-தெலுங்கு நடிகை த்ரிஷா, கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் இருந்து தெலுங்கு பத்திரிகைகள், மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கண்டனமும், மறுப்பும் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

    அதில், "என்னுடைய தொலைபேசி எண் நைஜீரியா வாலிபருக்கு எப்படி கிடைத்தது என்று எனக்குத் தெரியாது. போதைப் பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதை பொருளை பயன்படுத்தும் பழக்கமும் எனக்கு இல்லை. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் என் மீது புரளியை கிளப்பி விட்டுள்ளனர். என் மேலாளர் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.

    இதற்கு முன்பும் இதுபோல என்மீது பல குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்று பின்னர் வெளியானது. இந்த விஷயத்திலும் உண்மை வெளிவரும். என் பெயரை யாராவது தொடர்புபடுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று எச்சரிக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    என்.டி.ஆர். மகன், நடிகர்கள் கண்டனம்:

    அதேபோல, போதை பொருள் விவகாரத்தில் எந்த நடிகர், நடிகைகளையும் தொடர்புபடுத்தி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது என்று என்.டி.ராமாராவின் மகன் நடிகர் அரிகிருஷ்ணன், ஜெகன் மோகினி படத்தில் நடித்த கதாநாயகன் ராஜா, அமலாபுரம் தொகுதி எம்.பி. ஹர்ஷ குமார் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X