நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்காத ஆகாஷ்!

நடிகை வனிதாவுக்கும், ஆகாஷூக்கும் கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி (வயது 9), ஜோவிகா (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றம் மூலம் வனிதாவும், ஆகாஷூம் விவாகரத்து பெற்றனர்.
குழந்தை விஜய் ஸ்ரீஹரி தந்தை ஆகாஷூடன் இருக்கலாம் என்று நீதிமன்றம் 9.6.07 அன்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரியை தன்னுடன் வைத்துக்கொள்ள வனிதா செகந்திராபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல நீதிமன்றம் கடந்த 25.6.08 அன்று உத்தரவு வழங்கியது.
இதற்கிடையே தன் மகன் தன்னுடனே இருக்க அனுமதி வேண்டும் என்று ஆகாஷூ சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
அதில், 'வழக்கு வருகிற 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. 23-ந் தேதி காலை 11 மணிக்கு வனிதாவின் வக்கீல் நளினி சிதம்பரம் அலுவலகத்தில் அவரிடம் குழந்தையை ஆகாஷ் ஒப்படைக்க வேண்டும். 28-ந் தேதி மாலை 4.30 மணிக்கு குழந்தையை வனிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதுவரை குழந்தையை இடைக்காலமாக வனிதா தனது பராமரிப்பில் வைத்துக்கொள்ளலாம்' என்றும் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அலுவலகத்திற்கு நேற்று காலை நடிகை வனிதா வந்தார். சிறிது நேரத்தில் ஆகாஷும் அங்கே வந்தார். இரு தரப்பு வக்கீல்களும் அங்கே வந்தனர். ஆனால் குழந்தை விஜய் ஸ்ரீஹரியை அழைத்து வரவில்லை ஆகாஷ். இதனால் குழந்தை விஜய் ஸ்ரீஹரி வனிதாவிடம் ஒப்படைக்கப்படவில்லை.
பெரும் ஏமாற்றத்துக்குள்ளான வனிதா, "ஆகாஷ் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார். என் மகனை மறைத்து வைத்து என்னை தவிக்க வைத்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். குழந்தையை இங்கே அழைத்து வரக்கூட இல்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்கிறேன். 28-ம் தேதி நீதிமன்றத்தில் வரும் தீர்ப்புப்படி செயல்படுவேன்", என்றார்.
இது குறித்து ஆகாஷிடம் கேட்டபோது, "தாயிடம் செல்ல அவன் விரும்பவில்லை. அதனால் அவன் அடம்பிடித்து வரவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை,'' என்றார்.


Click it and Unblock the Notifications











