மோசர் பேயர்-சோனி கூட்டணி!
மோசர் பேயர் நிறுவனம் தயாரிக்கும் ராமன் தேடிய சீதை, புதிய வார்ப்புகள் மற்றும் பூ ஆகிய மூன்று படங்களின் பாடல்களையும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது சோனி பிஎம்ஜி நிறுவனம்.
மோசர் பேயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், பிரபல இசை வெளியீடு நிறுவனமான சோனி பிஎம்ஜியும் இணைந்து புதிய தமிழ் திரைப்படங்களின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக மோசர் பேயரின் சமீபத்திய தயாரிப்புகளான மூன்று திரைப் படங்களின் பாடல்களை வெளியிட இருக்கிறது சோனி.
இனி வரும் காலங்களில் மோசர்பேயர் நிறுவனம் தயாரிக்கும் மற்ற படங்களிலும் இந்த வர்த்தக உறவு தொடரும் என அதன் தலைமை செயல் அலுவலர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
2007-ல் பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தது மோசர் பேயர். இவர்களின் முதல் கூட்டுத் தயாரிப்பான வெள்ளித்திரை 2008 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதைப் போலவே டூயட் மூவிஸூடன் இணைந்து அபியும் நானும், மற்றும் மயிலு ஆகிய இரண்டு படங்களும் இவ்வாண்டு திரைக்கு வரவுள்ளன.
இதற்கிடையில் மோசர்பேயர் நிறுவனம் மேலும் மூன்று படங்களைத் தனியாக தயாரித்து வருகிறது. கே.பி. ஜெகன்நாத் இயக்கத்தில் ராமன் தேடிய சீதை (சேரன், பசுபதி,நிதின் சத்யா, கருணாஸ், மணிவண்ணன், மற்றும் 5 கதாநாயகிகள், இசை- வித்யாசாகர்), இயக்குனர் சசி இயக்கத்தில் பூ (ஸ்ரீகாந்த், பார்வதி, இசை- புதுமுகம் குமரன்) இயக்குனர் பாக்யராஜின் புதிய வார்ப்புகள் (சாந்தனு, சாந்தினி, இசை- தரண்) இந்த எல்லா படங்களும் ஆகஸ்ட் முதல் திரைக்கு வர இருக்கின்றன.
சோனி பிஎம்ஜி நிறுவனம் இந்த மூன்று திரைப்படங்களின் இசை மற்றும் பாடல்களை வெளியிடுகிறது. முதல் கட்டமாக ராமன் தேடிய சீதையின் இசை வெளியீடு ஜூலை 30ம் தேதி நடக்கிறது.


Click it and Unblock the Notifications











