'சினிமாக்காரர்களுக்கு வீடு கட்ட தலித்துகளை அகற்ற முயற்சி!'
சேலம்: திரைப்படத் துறையினருக்கு வீடுகள் கட்டுவதற்காக பையனூர் அருகில் இருக்கும் தலித் மக்களை அகற்ற தமிழக அரசு முயற்சிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறுகையில், "திரைப்படக் கலைஞர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதில் 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் வீடு கட்டும் இந்த முயற்சிக்காக அருகில் வசிக்கும் தலித் மக்களை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது.
1980-களில் தமிழகத்தில் பெரும் புயல், வெள்ளம் ஏற்பட்டபோது தாழ்வான பகுதியில் வசித்து வந்த தலித்துகள் வாழ்விடங்களை இழந்தனர். இதையடுத்து அப்போதைய அரசு, பையனூர் பகுதியில் 76 ஏக்கர் நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது.
இந்த நிலையில் சினிமா நகரம் அமைய உள்ள இடத்துக்கு அருகில் இந்த மக்களின் நிலம் இருப்பதால் இவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதனால்தான் அங்கு நடைபெற இருந்த கலைஞர் நகர் துவக்க விழா ரத்து செய்யப்பட்டது. தலித்துகளுக்கு எதிரான இந்த செயலை வாபஸ் பெறாவிட்டால் இந்திய குடியரசுக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்..." என்றார் தமிழரசன்.


Click it and Unblock the Notifications











