2025ம் ஆண்டு இதுவரை வெளியான 128 படங்கள்.. தமிழ் சினிமாவுக்கு ஒட்டுமொத்தமாக இத்தனை கோடி நஷ்டமா?
சென்னை: இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை அதற்குள் அரையாண்டு ஓடிப் போய்விட்டது. இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 128 படங்கள் வெளியாகி உள்ளன. இதில், 70 சதவீதத்துக்கும் மேல் 1 கோடி முதல் 3 கோடி வரை எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் தான். ஆனால், அதில், ஒன்றிரண்டு படங்களை தவிர பெரிதாக எந்த படமும் ஓடவில்லை.
100 கோடிக்கு மேல் போட்டு எடுக்கப்பட்ட 5 படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே லாபத்தை ஈட்டியிருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக வெளியான 128 படங்களுக்கு செலவு செய்யப்பட்ட தொகையை விட 2 மடங்கு அதிகமாக லாபம் வந்திருந்தால் தமிழ் சினிமா செழித்திருக்கும் என்றும் ஆனால், சில நூறு கோடி நஷ்டம் தான் இந்த 6 மாதத்தில் ஏற்பட்டுள்ளதாக புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு முதல் 6 மாதங்களில் வெளியான படங்களில் எந்த எந்த படங்கள் எல்லாம் பெரிய வசூல் வேட்டையை நடத்தின. எதெல்லாம் சுத்தமாக ஓடவே இல்லை என ஒட்டுமொத்த லிஸ்ட்டையும் இங்கே பார்க்கலாம் வாங்க..
817 கோடி பாக்ஸ் ஆபீஸ்: அஜித் குமாரின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இந்த 2 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தமிழ் சினிமா 817 கோடி ரூபாயை வசூல் செய்ய முக்கிய பங்கு வகித்துள்ளன. மேலும், பிரதீப் ரங்கநாதனின் டிராகன், சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, விஷாலின் மத கஜ ராஜா உள்ளிட்ட படங்கள் தான் அதிக வசூலை ஈட்டியுள்ளன. சூர்யாவின் ரெட்ரோ, கமல்ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் படங்கள்: அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களுமே 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. இதில், விடாமுயற்சி பெரிதாக வசூல் செய்யவில்லை. குட் பேட் அக்லி திரைப்படம் தான் 250 கோடி வரை வசூல் ஈட்டியதாக கூறுகிறார். கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம், சூர்யாவின் ரெட்ரோ மற்றும் தனுஷின் குபேரா உள்ளிட்ட 5 படங்கள் தான் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்.
சூப்பர் ஹிட் அடித்த சிறு பட்ஜெட் படங்கள்: 35 கோடி பட்ஜெட்டில் உருவான டிராகன் திரைப்படம் 150 கோடி வரை வசூல் ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனை இந்த ஆண்டு நிகழ்த்தியது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 50 கோடி வரை வசூலை 12 ஆண்டுகள் கழித்து வெளியான விஷாலின் மத கஜ ராஜா ஈட்டியது. 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இதுவரை 90 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய அளவுக்கு தயாரிப்பாளருக்கும் தமிழ் சினிமாவுக்கும் லாபத்தை கொடுத்துள்ளது.

250 கோடி நஷ்டம்: ஒட்டுமொத்தமாக இதுவரை வெளியான 128 படங்களை உருவாக்க தயாரிப்பாளர்கள் செலவு செய்த தொகையாக 1750 கோடி ரூபாயும் அதற்காக செய்யப்பட்ட புரமொஷன் செலவு 125 கோடி ரூபாயை சேர்த்தால் 1875 கோடி ரூபாய் வருகிறது என்றும் ஆனால், 6 மாதத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த லாபம் மொத்தமாக 1625 கோடி ரூபாய் தான் என்றும் அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் நஷ்டத்தை தமிழ் சினிமா முதல் 6 மாதத்தில் சந்தித்துள்ளதாக தனஞ்செயன் கூறியுள்ளார். இந்த லாபத்தில் 40 சதவீதம் ஓடிடி விற்பனை மூலமாகத்தான் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











