தர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தர்பார் திரைப்படம் 25 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளதாக #25DaysOfBlockbusterDARBAR என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்தது தர்பார்.
தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் அதனை வெற்றிப் படமாக கொண்டாடி வருகின்றனர்.

லாபமா? நஷ்டமா?
தர்பார் படம் வெளியான முதல் வாரத்திலேயே 150 கோடி வசூலை உலகளவில் ஈட்டியதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு வசூல் அப்டேட்டையும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், தர்பார் படம் பயங்கர லாஸ் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.

விமர்சன ரீதியாக
வசூல் ரீதியாக தர்பார் படத்தின் உண்மை நிலை இதுவரை தெரியவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக தர்பார் படம் பின் தங்கியே உள்ளது. அதிலும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட விமர்சகர்கள் தர்பார் படத்தை கழுவி கழுவி ஊற்றியிருந்தனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய கதை தர்பார் படத்தில் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை தர்பார் பூர்த்தி செய்யவில்லை என்ற கருத்துக்களே அதிகளவில் எழுந்தன.
எதுக்கும் கவலை இல்லை
ஆனால், ரஜினி ரசிகர்களை பொறுத்தவரையில், நெகட்டிவ் விமர்சனங்கள், போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி என எந்த விஷயத்தை பற்றியும் கவலை இல்லை என்றும், தலைவரின் தர்பார் படம் தியேட்டர்களில் 25வது நாளான இன்றும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது என #25DaysOfBlockbusterDARBAR ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பிளாக்பஸ்டர்
படத்தை பார்த்த பலரும் தர்பார் படத்தின் முதல் பாதியில் ரஜினியின் நடிப்பு மற்றும் எனர்ஜி செம்ம ஸ்டைலாக இருக்கிறது என்றும், அவருக்கு இப்போதும் வயதாக வில்லை என்றும் தெரிவித்து வந்தனர். முதல் பாதி படத்திற்காகவே மொத்த பணத்தையும் தரலாம் என ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், படம் 25 நாட்களை கடந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.
அப்பா – மகள் சென்டிமென்ட்
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் எப்போதுமே சென்டிமென்ட் காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகும். கடந்த ஆண்டு வெளியான தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் அப்பா - மகள் சென்டிமென்ட் வேற லெவலில் ஒர்க்கவுட் ஆகியிருந்த நிலையில், தற்போது தர்பார் படத்திலும், ரஜினிகாந்த், நிவேதா தாமஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ராஜாவுடன் யாரும்
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலில் இன்னிக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு சும்மா கிழி என பாடியது போல, பாக்ஸ் ஆஃபிஸ் ராஜாவான ரஜினியுடன் யாரும் மோதக் கூடாது என அவரது ரசிகர்கள் ட்வீட்களை பதிவிட்டு ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
காமெடி சூப்பர்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தில் யோகி பாபுவுடன் செய்யும் டைமிங் காமெடி காட்சிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு செம்மையா ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது என இந்த ரசிகர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். சர்கார் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் யோகி பாபுவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
320 கோடி
லைகா தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் 350 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் மட்டும் 148 கோடி ரூபாய்க்கும் மேல் தர்பார் திரைப்படம் வசூலித்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











