சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு வயது ஒன்று

திருப்பதியா, 'சிருப்பதியா' என்று கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு இதே நாளில் திருப்பதியில் நடந்த சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தொடக்க விழா படு அமர்க்களமாக இருந்தது. அடுத்த என்டிஆர் என்று அனைவரும் சிரஞ்சீவியை வர்ணித்தனர்.
ஆனால் இன்று சிரஞ்சீவி கட்சியின் நிலை படு மோசமாக இருக்கிறதாம். கட்சி ஆரம்பித்து ஒரு வருடமாகி விட்ட நிலையில் கட்சி இருக்குமா, இருக்காதா என்ற கேள்விக்குறியுடன் 'ஐசியூ'வில் கிடக்கிறது.
லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலை முதல் முறையாக சந்தித்த சிரஞ்சீவி கட்சி லோக்சபா தேர்தலில் ஒரு சீட் கூட பெற முடியவில்லை. சட்டசபையில் 17 இடங்களில் வெற்றி பெற்றது.
இது சிரஞ்சீவிக்கும், அவரது கட்சியினருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. இதை பெரும் தோல்வியாக பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் கருதினர்.
ஆனால் தேர்தலுக்கு முன்பே கட்சியை ஆட்டம் காண வைத்து விட்டார் முதல்வர் ராஜசேகர ரெட்டி. கட்சியின் சில முக்கியத் தலைவர்களை காங்கிரஸ் பக்கம் இழுத்து விட்டார். தேர்தல் முடிந்த பின்னர் நிலைமை மேலும் மோசமானது. மேலும் பல முக்கியத் தலைவர்கள் கட்சியை விட்டு ஓடி விட்டனர்.
இன்று சிரஞ்சீவியைத் தவிர வேறு யாரும் அங்கு முக்கியத் தலைவர்களாக இல்லை. குறிப்பாக பல்வேறு கட்சிகளிலிருந்து வந்து இணைந்தவர்கள் இப்போது சிரஞ்சீவியை விட்டு விட்டுப் போய் விட்டனர்.
மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறது பிரஜா ராஜ்ஜியம் கட்சி.
இந்த நிலையில் கட்சியை காங்கிரஸுடன் இணைக்க ராஜசேகர ரெட்டி, சிரஞ்சீவி கட்சியின் எம்.எல்.ஏக்கள் சிலரின் மூலமாக நெருக்குதல் கொடுத்து வருகிறார். ஆனால் அடிபணிய மறுக்கிறார் சிரஞ்சீவி.
அவரிடம் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. கட்சியின் நிலை குறித்து அவர் கூறுகையில், இப்போது நடந்து கொண்டிருப்பது சுத்திகரிப்பு வேலை. இதனால் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். இப்போது எங்களுடன் இருப்பவர்கள்தான் உண்மையான கட்சி நலம் விரும்பிகள் என்றார்.
சிரஞ்சீவியின் தோல்விக்கு என்ன காரணம் என்று ஆந்திர அரசியலில் கூறப்படுகிறதென்றால் - குடும்பத்தினர்தான் கட்சியை நிர்வகிக்கின்றனர். குறிப்பாக சிரஞ்சீவியின் மச்சான் அல்லு அரவிந்த்தைத் தாண்டி சிரஞ்சீவியிடம் ஒரு ஈ, காக்கா கூட போக முடியாத நிலை.
2வது - சிரஞ்சீவிக்கு அரசியல் அறிவும், அனுபவமும் போதவில்லை. ஆந்திர அரசியலின் பழுத்த தலைவர்களை எதிர்த்து நிற்கும் திடமான இமேஜ் அவரிடம் இல்லை.
என்டிஆர் க்ட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார் என்பதற்காக வருகிற அத்தனை நடிகர்களுமே அதேபோல உயர்ந்து விட முடியாதே என்கின்றனர் ஆந்திர அரசியல் நாடி அறிந்தவர்கள்.
ஒரு வருடத்தி்ல் கட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ள நிலையில் அதை சரி செய்து, எப்படி தொடர்ந்து நடைபோடப் போகிறார் சிரஞ்சீவி என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











