கம்யூ. தலைவர் ஜீவாவின் வாழ்க்கை படமாகிறது

தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் மிக முக்கியமானவர் தோழர் ஜீவா. ஜீவானந்தம் என்ற இயற் பெயர் கொண்ட தோழர் ஜீவா நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி கிராமத்தில் பிறந்தவர்.
அரசியல் வாழ்க்கையில் தூய்மையாக வாழ்ந்த ஜீவா எல்லா தலைவர்களாலும் பாராட்டப்பட்டவர். இந்தியாவின் சொத்து என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர் ஜீவா. ஜீவாவின் நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. சமுதாய சீர்திருத்தவாதி, எழுத்தாளர், விமர்சகர், கலாசார படைப்பாளர் என்று பண்முகம் கொண்டவர் ஜீவா.
அவரது வாழ்க்கை வரலாறு தற்போது படமாக உருவாக இருக்கிறது. தோழர் ஜீவா என்று படத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. வைகுண்டா பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் தற்போது அய்யாவழி என்ற படத்தை உருவாக்கி வருகிறது. அதன் இயக்குநர் பி.சி.அன்பழகன்தான் தோழர் ஜீவா வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கவுள்ளார்.
இதுகுறித்து நாஞ்சில் பி.சி.அன்பழகன் கூறுகையில், அரசியலில் சாதனை படைத்த தலைவர் ஜீவா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருக்கிறேன். கவிஞர் பொன்னீலன் இதற்காக ஆய்வு செய்து வருகிறார். படத்தில் நடிக்க பிரபல நடிகருடன் பேச்சு நடந்து வருகிறது. அவர் பிறந்த பூதப்பாண்டியில் தொடங்கி அவர் வாழ்ந்த பகுதிகளில் படமாக்குகிறோம் என்று கூறினார்.
இப்படத்தில் செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். பகவதி சிவநேசன் இசை அமைக்கிறார். ஜூலை மாதம் படப்பிடிப்புத் தொடங்குகிறதாம்.


Click it and Unblock the Notifications











