புதுமுக நடிகையை கற்பழித்த இயக்குநர் கைது
பெரிய ஆளாக்கி விடுகிறேன், நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறி புதுமுக நடிகையை கற்பழித்ததாக இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட இயக்குநரின் பெயர் ராம் குமார் குமாவத். இவர் சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றை இயக்கியுள்ளார்.
இவரிடம் 24 வயதான பெண் ஒருவர் அணுகி ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு நிச்சயம் வாய்ப்பு தருவதாகவும், பெரிய நடிகையாக்கிக் காட்டுவதாகவும் வாக்களித்த குமாவத் ஆடிஷன் டெஸ்ட்டுக்கு அவரை அழைத்துள்ளார்.
அந்தப் பெண்ணும் போயுள்ளார். ஆடிஷன் டெஸ்ட் முடிந்தும், எனது படங்களில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார்.
ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் 3 நாட்களுக்கு முன் அப்பெண் இயக்குநரை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் வெர்சோவாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற அப்பெண்ணை, இயக்குநர் குமாவத் கட்டாயப்படுத்தி கற்பழித்து விட்டார். இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் அப்பெண்ணை குமாவத் மிரட்டியுள்ளார்.
இருப்பினும் வெர்சோவா காவல் நிலையத்தில் அப்பெண் இயக்குநர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து குமாவத்தை போலீஸார் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications











