நடிகர் ஆர்யாவைக் கைது செய்யக் கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை: தமிழர்களை இழிவுபடுத்திய ஆர்யாவைக் கைது செய்ய வேண்டும், என்று வழக்கறிஞர்கள் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மலையாளிகள் விழாவில் பங்கேற்ற நடிகர் ஆர்யா, தமிழ் நடிகர்களையும், தமிழர் ரசனையையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக புகார் எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து பெப்சி சங்க தலைவர் வி.சி. குகநாதன் பேசினார்.
இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடிகர் ஆர்யாவைக் கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் ராமசிவசங்கர் தலைமை தாங்கினார். அதில் ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலர் பங்கேற்றனர். அப்போது ஆர்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும். கைது செய்ய வேண்டும் என்பன போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.


Click it and Unblock the Notifications











