தள்ளிப் போன அழகர்சாமியின் குதிரை!
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அழகர்சாமியின் குதிரை படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் கிரிக்கெட் மோகம் காரணமாக பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது திரைப்படத்துறை. பெரிய படங்களை வெளியிட்டால் மக்கள் தியேட்டருக்கு வராமல், தூக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில் பல படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாகியுள்ள படமான அழகர்சாமியின் குதிரை வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென்று இப்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடப்பதால், பட வசூல் முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக படத்தின் வெளியீட்டாளரான க்ளவுட் நைன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படம் மே மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அழகர்சாமியின் குதிரையில் பெரிய நட்சத்திரங்கள், பிரமாண்ட உருவாக்கம் எதுவும் இல்லை. ஆனால் பாடல்கள் வெளியான பிறகு படத்தின் மீதே தனி மரியாதை ஏற்பட்டுள்ளது ரசிகர்களுக்கு. இளையராஜா அந்த அளவு இசையில் தனி ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். மூன்று பாடல்கள் என்றாலும், இந்த ஆண்டின் இணையற்ற பாடல்களாக அவை பேசப்படும் அளவுக்கு அமைந்துள்ளது படத்துக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை கிளறிவிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











