பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு.. 28 பாடகர்களின் அசத்தல் ட்ரிபியூட்!
சென்னை: பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு, 28 பாடகர்கள் இணைந்து அவருக்கு அசத்தல் டிரிபியூட் செய்துள்ளனர்.
மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனைப் படைத்தவர், கே.ஜே.யேசுதாஸ்.
சிறந்த பாடலுக்காக, எட்டு முறை மத்திய அரசின் தேசிய விருது பெற்றிருக்கிறார்.

81 வது பிறந்த நாள்
1960-ஆம் வருடம் தனது இசைப் பயணத்தை தொடங்கிய யேசுதாஸ், பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். சபரிமலையில் இன்றும், ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான். பிரபல பாடகரான அவருக்கு இன்று 81 வது பிறந்த நாள். இதையடுத்து பின்னணி பாடகர்களும் இசை ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்து வருகின்றனர்.

சாமி தரிசனம்
கே.ஜே.யேசுதாஸ், தனது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வருடமும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அங்கு அம்மன் பாடலைப் பாடி இசைக் கச்சேரியும் நடத்துவார். கடந்த 48 வருடமாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் இந்த வருடம் அவர் அங்கு செல்லவில்லை.

அசத்தல் ட்ரிபியூட்
கொரோனா பரவல் அதிகரிப்பாலும் கொரோனா கட்டுப்பாடுகளாலும், அவர் மூகாம்பிகை கோயிலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு டல்லாஸ் பகுதியில் இருக்கும் ஜேசுதாஸுக்கு 28 பின்னணி பாடகர்கள் இணைந்து அசத்தல் ட்ரிபியூட் செய்துள்ளனர்.

சங்கர் மகாதேவன்
அனைவரும் இணைந்து அவரை பாராட்டி பாடல் ஒன்றை பாடியுள்ளனர். 'மண்ணின்டே புணியமம் காந்தர்வ காயகா' என்று தொடங்கும் இந்த மலையாளப் பாடலை ஹரிநாராயணன் எழுதியுள்ளார். பாடகி ஸ்வேதா மேனன் இசை அமைத்துள்ள இந்தப் பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் வெளியிட்டுள்ளார்.

விஜய் யேசுதாஸ்
இதில், கே.எஸ்.சித்ரா, எம்.ஜி.ஶ்ரீகுமார், சுஜாதா மோகன், ஶ்ரீனிவாஸ், வேணுகோபால், பிஜு நாராயணனன். உன்னி மேனன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், ராஜலட்சுமி, ஆலாப் ராஜூ உட்பட 28 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்த பாடல் யூடியூப்பில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











