கொலை மிரட்டல் விடுக்கிறார் பைனான்சியர்-சுலக்ஷ்னா புகார்

தூறல் நின்னு போச்சு படத்தில் அறிமுகமாகி ஏகப்பட்ட படங்களில் நடித்தவர் சுலக்ஷ்னா. தற்போது டிவி நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அம்மா வேடத்தில் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.
இவரது வீடு சென்னைப் புறநகரான பாலவாக்கத்தில் உள்ளது. இன்று காலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார் சுலக்ஷ்னா. ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
மாடசாமி என்கிற பைனான்சியர் தன்னைக் கடத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து சுலக்ஷ்னா கொடுத்த புகாரில், வடபழனியைச் சேர்ந்த மாடசாமி என்ற சினிமா பைனான்சியரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அதை வட்டியுடன் சேர்த்து ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை கட்டி விட்டேன்.
ஆனால் மாடசாமி, நான் இன்னும் ரூ. 1.80 லட்சம் தர வேண்டும் என்று கூறுகிறார். நான் கொடுக்க மறுத்தேன். இதையடுத்து சில ரவுடிகளுடன் நேற்று எனது வீட்டுக்குப் பணத்தைக் கொடுக்குமாறு கூறி மிரட்டினார். நான் கொடுக்க மறுத்தபோது, அப்படியானால் வீட்டை எழுதி கொடுக்குமாறு மிரட்டினார். மேலும் கடத்திக் கொண்டு போய் தீர்த்துக் கட்டி விடுவதாகவும் மிரட்டினார்.
எனக்கு இந்தக் கும்பலிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் சுலக்ஷ்னா.


Click it and Unblock the Notifications











