அய்யோ கடவுளே 28 வயசு தானே ஆகுது.. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த மின் ஊழியர்.. கதறும் குடும்பம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் மின் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். சென்னை பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் மின்பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பவர், மின்சாரம் தாக்கியதில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' முதல் பாகம் கடந்த 2023இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பான இப்படம், உலக அளவில் ₹600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த மெகா வெற்றியைத் தொடர்ந்து, 'ஜெயிலர் 2' தற்போது உருவாகி வருகிறது. பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் போன்றோர் நடிப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் இதன் படப்பிடிப்பு சுமார் ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை படப்பிடிப்பின்போது, வீடு போன்ற செட் ஒன்றில் மின்விசிறி அமைக்கும் பணியில் EEE பட்டதாரியான கார்த்திகேயன் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, அவர் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்த சக பணியாளர்கள் உடனடியாக அவரைக் மீட்க கடுமையாக முயன்றனர்.
உடனடியாக பனையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கார்த்திகேயனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்த கானத்தூர் போலீசார் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகேயனின் உடலை பார்த்து அவரது குடும்பம் கதறி அழுது சரியான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிலரது அலட்சியத்தால் தொடர்ந்து படப்பிடிப்புகளில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்வதை ஏற்க முடியாது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications