twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவா பட விழாவில் எம்.எப். ஹுசைன் படம் உள்பட 2 ஆவணப் படங்களுக்கு தடை- தமுஎகச கண்டனம்

    |

    MF Hussain
    கோவா: கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் 2 திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

    கோவாவில் ஆண்டுத்தோறும் நடைபெறும் இந்திய பன்னாட்டு திரைப்பட விழா, திரைப்பட ஆர்வலர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிற ஒரு நிகழ்வாகும். தற்போது 42வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா - கோவா 2011 திரையிடலில் இருந்து 2 முக்கியமான படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திரைப்பட ஆர்வலர்களுக்கும், கருத்து சுதந்திரத்தை நேசிப்பவர்களுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உலகப் புகழ்பெற்ற இந்திய ஓவியர் அமரர் எம்.எப்.உசேன் இயக்கிய 'த்ரூ தி அய்ஸ் ஆஃப் தி பெயின்டர்" என்ற ஒரு ஓவியரின் பார்வையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற ஒரு ஆவணப் படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. இந்த படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (நவ.27), அதன் திரையிடல் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்து ஜனஜாக்ருதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு ஒன்று இந்தப் படத்தைத் திரையிட்டால் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்று அச்சுறுத்தியதன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே போல் 2 நாட்களுக்கு முன்பாக 'இன்குலாப்" என்ற குறும்படத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

    கவுரவ் சாப்ரா இயக்கிய இந்தக் குறும்படம் பகத்சிங் தியாகத்தை பின்னணியாகக் கொண்டு, இன்று நாட்டில் தலைவிரித்தாடும் சமத்துவமின்மை, மதவெறி, சாதியம், ஊழல், வேலையின்மை, பன்னாட்டு நிறுவனங்களுக்காக வளைக்கப்படும் சட்டங்கள், மரபணு நீக்கப்பட்ட விதைகளுக்கு அனுமதி போன்ற கேடுகள் பற்றி 2 இளைஞர்கள் உரையாடுவதாக அமைந்ததாகும்.

    தேச விரோத கருத்துகளை இந்தப் படம் கொண்டிருப்பதாகக் கூறி, இதற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது. இதனால் இந்த விழாவில் இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த 2 படைப்புகளும் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

    இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மக்கள் தங்கள் தேர்வுப்படி கலையாக்கங்களைக் காணும் சுதந்திரத்தின் மீதான கொடூரத் தாக்குதலாகும். எனவே இந்திய பன்னாட்டு திரைப்பட விழா அமைப்பாளர்கள் இந்த 2 திரைப்படங்களையும் தடையின்றித் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தணிக்கைக் குழு 'இன் குலாப்" படத்திற்குச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamil Nadu Murpokku Ezhuthalar-Kalaignarkal Sangam has condemed the ban of 2 films including MF Hussain's 'Through the eyes of the painter' at the ongoing international film festival in Goa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X