துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயம்: கேரள தொழில் அதிபருடன் ஓட்டம்?
துபாயில் இருந்து சென்னை வந்த துணை நடிகை மாயமாகி விட்டார். கேரள தொழில் அதிபருடன் அவர் ஓடிவிட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய போலீசில் நாகர்கோவில் ராமன் புதூரைச் சேர்ந்த ராஜா ஒரு புகார் மனு அளித்தார். அதில், "என்னுடைய மனைவி மீனா (வயது 27). துணை நடிகையாக படங்களில் நடித்து வருகிறார்.
அவர் கடந்த 24-4-2011 அன்று துபாயில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்றார். கடந்த 3 மாதங்களாக துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் கடந்த 23-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரை அழைத்து செல்ல விமான நிலையத்தில் காத்திருந்தேன்.
அப்போது என் மனைவியுடன் செல்போனில் பேசியபோது விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரத்தில் வந்து விடுவதாகத் தெரிவித்தார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவளுடன் சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் எனது மனைவியை பற்றி விசாரித்தபோது அவர் நீண்ட நேரத்திற்கு முன்பே சென்று விட்டதாக தெரிவித்தனர். என் மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில், கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் துபாயில் நடந்த கலை நிகழ்ச்சியில் மீனாவுடன் பழகி உள்ளார். அவரும் மீனாவுடன் சென்னை வந்தாராம். இதனால் மீனா கேரளா தொழில் அதிபருடன் சென்று விட்டிருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











