ஒச்சாயி திரைப்படத்திற்கு வரி விலக்கு-முதல்வருக்கு தயாரிப்பாளர் நன்றி

உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ.ஆசைத்தம்பி என்பவர் இயக்கியுள்ள படம் ஒச்சாயி. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து வருகிறது தமிழக அரசு.
ஆனால் ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறி அப்படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது அரசு. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரின் குல தெய்வம்தான் ஒச்சாயி அம்மன். எனவே இது சுத்தமான தமிழ்ப் பெயர்தான். இப்படத்துக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சிபிஐ தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இதுகுறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தற்போது ஒச்சாயி படத்துக்கும் கேளிக்கை வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் திரவிய பாண்டியன், முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications