3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி.. சோகத்தில் முடிந்த பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.
ஹைதராபாத்: பிரபல டோலிவுட் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.
Recommended Video
பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு அருகே பிளெக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.
மேலும், 3 ரசிகர்கள் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

49வது பிறந்தநாள்
1971ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி பிறந்த நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு வக்கீல் சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

பிளெக்ஸ் வைக்க சென்ற இடத்தில்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று 49வது பிறந்த நாள் விழா. இதற்காக அவரது வீட்டு முன்னாடி பிளக்ஸ் வைப்பதற்காக சேகா சேகர், அருணாசலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் நேற்று இரவு அங்கு சென்றனர்.

மூன்று பேர் பலி
25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2 லட்சம் ரூபாய்
எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 3 ரசிகர்கள் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். உயிரிழந்த நபர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை நடிகர் பவன் கல்யாண் மற்றும் வக்கீல் சாப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











