இனி பாட மாட்டேன்! - அதிர்ச்சி தந்த யுவன்

இன்றைய தேதிக்கு தமிழின் நம்பர் 1 இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாதான். 'இந்த (சின்ன) ராஜா கைவைத்த எந்த படமும் ராங்கா போனதில்ல' என்று கூறும் அளவுக்கு அவர் இசையமைத்த படங்களும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. கடந்த ஆண்டின் வெற்றிப் படங்கள் பலவற்றுக்கும் அவர்தான் இசை.
தவிர, பையா, நான் மகான் அல்ல, பாணா காத்தாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் இசை பெரிதும் பேசப்பட்டது.
இந்தப் படங்களில் எல்லாம் யுவன் சங்கர் ராஜா தவறாமல் ஓரிரு பாடல்கள் பாடி வந்தார். ஆரம்பத்தில் யுவன் பாடுவது குறித்து சிலர் வேண்டுமென்றே குறை சொல்லி வந்தார்கள். ஆனால் பின்னர் யுவனின் குரலே பெரிய ப்ளஸ் பாய்ண்ட் என்று சொல்லும் அளவுக்கு அவர் குரல் பிரபலமாகிவிட்டது.
பாணா காத்தாடியில் வரும் கண்தாக்குதே, நான் மகான் அல்ல படத்தில் வரும் இறகைப் போலே, பையாவில் இடம் பெற்ற என் காதல் சொல்ல வார்த்தையில்லை, பதினாறு படத்தில் வந்த யார் சொல்லி காதல்... போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. ரசிகர்களின் மனதில் அழுத்தமாக இடம்பிடித்தவை.
அவர் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.
இந்த நிலையில், இனி பாடுவதில்லை என்ற அதிர்ச்சிகரமான முடிவை இன்று அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டரில் இதுகுறித்து அவர் கூறுகையில், "கையில் நிறைய படங்கள். பணியாற்ற நான்கு கைகள் கூட போதாது என்ற நிலை. அத்தனை படங்களுமே எனக்கு முக்கியம். வெற்றிகரமாக அமைய வேண்டும். அதே நேரம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளேன்... இனி பாடுவதில்லை என்பதுதான் அந்த முடிவு. எவ்வளவு காலத்துக்கு என்பது தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு பாடுவதாக இல்லை", என்று குறிப்பிட்டுள்ளார்.
யுவனின் இந்த முடிவு திரை இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











