ஆபாச பேச்சு: சூர்யா,சத்யராஜ்,சரத்குமார்,விவேக் ஆஜராக சிவகங்கை கோர்ட் உத்தரவு!

குற்றவாளிக் கூண்டில் அவர்கள் ஏறி பதில் சொல்லும் காட்சியை, கட்டணமின்றி நிஜத்திலேயே பொதுமக்கள் பார்க்கலாம்.
பாஸ்டர்ட்ஸ், ஈனப்பிறவிகள், ராஸ்கல்ஸ் என்று அனைத்துப் பத்திரிகையாளர்களையும் மேடை போட்டு திட்டித் தீர்த்துவிட்டு, பின்னர் 'எங்களுக்குள் பேசிக் கொண்டோம்' என்று பம்மித் திரியும் இந்த நடிகர்கள் - நடிகைகள் மீது தமிழகம் முழுக்க பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கில் போலீசார் பொய்யான தகவல்களை அளித்து முடக்கினாலும், மாநிலம் முழுக்க உள்ள பிற கோர்ட்டுகள், நடிகர்கள் மீது தவறு இருக்கிறது என்பதை உறுதி செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டு வருகின்றன.
பழனியில் 2-ம் தேதி ஆஜர்...
முதல் கட்டமாக வரும் நவம்பர் 2-ம் தேதி பழனி கோர்ட்டில் ஆபாசப் பேச்சு புகழ் நடிகர்கள் சூர்யா, விவேக், சத்யராஜ், சரத்குமார், சேரன், ஸ்ரீபிரியா உள்ளிட்ட 8 பேரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பழனிக்குக் கிளம்பத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் வருகிற நவம்பர் 19-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அந்த மாவட்ட நீதிமன்ற மாஜிஸ்சிரேட் சரவணகுமார் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர்கள் விஜயகுமார், சூர்யா, சத்தியராஜ், சரத்குமார், விவேக், சரண், அருண்விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என இந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடுமலைப்பேட்டையில்...
ஆபாசப் பேச்சு புகழ் நடிகர்கள் மட்டுமின்றி, கடந்த அக்டோபர் 7-ம் தேதி கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற 20 நடிகர்கள் மீது மொத்தமாக கோவை உடுமலைப் பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர்கள் மீது குற்றத்துக்கான முகாந்திரம் உள்ளதை ஒப்புக் கொண்ட மாஜிஸ்திரேட்டு, நடிகர்கள் ஆபாசப் பேச்சுக்கான வீடியோ ஆதாரங்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.
நடிகர்கள் எப்போது ஆஜராக வேண்டும் என்பதை வரும் நவம்பர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, மதுரை, ராமநாதபுரம், நாகர்கோயில்...
இந்த கோர்ட்டுகள் தவிர, மதுரை, ராமநாதபுரம், நாகர்கோயில் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் ஆபாசப் பேச்சு புகழ் நடிகர் - நடிகைகளுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன.
சைதாப்பேட்டை கோர்ட்டிலும்...
சைதாப்பேட்டை கோர்ட்டில் பத்திரிகையாளர் குடும்பத்தினர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. இங்கும் 8 நடிகர்களும் ஆஜராக வேண்டி வரும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











