twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜசேகர ரெட்டி பெண்களுக்கு தரும் மரியாதை - மெய் சிலிர்க்கும் ரோஜா

    By Staff
    |

    Roja
    ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் பிரபல நடிகையுமான ரோஜா நாளை மறுநாள் காங்கிரஸில் இணைகிறார். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை நேற்று ஹைதராபாத்தில் சந்தித்து, தான் காங்கிரஸில் இணைவதை உறுதிப்படுத்தினார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஜா, வெளிப்படையாக அறிவிக்கும்வரை பொறுத்திருக்குமாறு கூறியுள்ளார்.

    ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் ரோஜா. கடந்த தேர்தலில் நாயுடு ஜெயிக்க ஹைதராபாத்தில் மிக பிரமாண்ட யாகமெல்லாம் நடத்தி சீன் போட்டவர். ஆனால் இவர் நின்ற தொகுதியிலேயே அவரால் ஜெயிக்க முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸில் சேரக் கூடும் என செய்திகள் வெளியாகின. இதை ஆரம்பத்தில் மறுத்த ரோஜா இப்போது, முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்து காங்கிரஸில் இணைய நாள் குறித்துள்ளார். மேலும் ராஜசேகர ரெட்டியை வானளாவப் புகழ்ந்து பேசியுள்ளார்.

    வருகிற 2-ந் தேதி திருப்பதியில், முதல்வர் ராஜசேகரரெட்டி தலைமையில் நடைபெறும் விழாவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாக உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன.

    நேற்று ஹைதராபாத்தில், முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடந்தது.

    திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும், திருப்பதி நகர காங்கிரஸ் பிரமுகருமான கருணாகர ரெட்டிதான் ராஜசேகர ரெட்டியிடம், ரோஜாவை அழைத்துச் சென்றிருந்தார்.

    ராஜசேகர ரெட்டியை சந்தித்துப்பேசிய பின் நடிகை ரோஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், "நான் பிறந்த சித்தூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். இங்குள்ள ஸ்ரீகாளஹஸ்தி அருகே மன்னாவரத்தில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் மின்சார கருவிகளை தயாரிக்கும் என்.டி.பி.சி.-பெல் நிறுவனம் அமைக்கப்படுகிறது.

    மத்திய அரசிடம் பேசி, இந்த திட்டத்தை சித்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்த முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு நன்றி தெரிவிப்பதற்காகத்தான் அவரை நேரில் சந்தித்தேன்.

    இதுவரை எத்தனையோ பேர் முதல்வர்களாக இருந்தும் அவர்கள் சித்தூர் மாவட்டத்திற்கென இவ்வளவு பெரிய திட்டம் எதையும் கொண்டு வர முயற்சிக்கவில்லை. அதனால் எந்த முதல்வரும் செய்யாத சாதனையை ராஜசேகர ரெட்டி செய்திருக்கிறார்.

    மெய் சிலிர்க்கிறது...

    பொதுக்கூட்டங்களில் நான் எத்தனையோ தடவை அவரை தரக்குறைவாக பேசியிருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்தித்தபோது அதைப் பற்றியெல்லாம் பெரிதுபடுத்தாமல் என்னிடம் கனிவாக பேசினார்.

    மது ஒழிப்புக்காக நான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதையும், பெண்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதையும் அவர் பெரிதும் பாராட்டினார். பெண்களுக்கு அவர் கொடுக்கும் மரியாதை, கவுரவத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன்.

    பொதுவாக பெண்களுக்கு சாதாரண அமைச்சர் பதவிகளைத்தான் ஒதுக்குவார்கள். அதையே மிகப்பெரிய சாதனையாகவும் கூறிக் கொள்வார்கள்.

    ராஜசேகர ரெட்டியோ, எல்லோரையும் விட ஒரு படி மேலே போய் நாட்டிலேயே முதல் முறையாக உள்துறை அமைச்சராக ஒரு பெண்ணை நியமித்து சாதனை படைத்து இருக்கிறார்.

    அண்மையில், மத்திய அரசு பெண்களுக்கு கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதுவும் பாராட்டுக்குரியது. காங்கிரஸும், ராஜசேகர ரெட்டியும் பெண்களுக்கு மிகுந்த முன்னுரிமை தருகிறது.

    தெலுங்கு தேசம் மீது தாக்குதல்...

    தெலுங்கு தேசம் பெண்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை. கவுரவமாகவும் நடத்துவதும் கிடையாது.

    இரண்டு தடவை தெலுங்கு தேசம் சார்பில் நான் சட்டசபைக்கு தேர்தலில் போட்டியிட்டேன். ஆனால் 2 தடவையும் தோற்கடிக்கப்பட்டேன். இதற்கு காரணம் உட்கட்சித் தலைவர்கள்தான். நான் கட்சியில் செல்வாக்கு பெறுவதை அந்த தலைவர்கள் விரும்பவில்லை, என்றார் ரோஜா.

    செல்வமணி...

    கடந்த தேர்தலின்போது ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸுக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியவர் ரோஜாவின் கணவர் இயக்குநர் செல்வமணி என்பது குறிப்பிடத்தக்கவர்.

    எப்படியோ தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இன்னொரு பிரசார பீரங்கி கிடைத்து விட்டார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X