அக். 23ம் தேதி இயக்குநர் சங்கத்தின் 40வது ஆண்டுவிழா கொண்டாட்டம்

By Sudha

Tamil Cinema Directors Association
தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40வது ஆண்டு விழாவை அக்டோபர் 23ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப் போகிறார்கள்.

இந்த விழாவில் இந்திய அளவில் சிறந்த இயக்குநர்களை வரவழைத்து கெளரவிக்கவும் உள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பாரதிராஜா மற்றும் செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை...

காலங்களைக் கடந்தது கலைத்துறை. அந்தக் கலைத்துறையின் தலைக்குழந்தை நமது இயக்கத் துறை.

தென்னிந்தியாவில் இயக்குநர்களுக்காக உதித்த முதல் சங்கம் இது. 40வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சங்கத்தில் தமிழ் மொழி மட்டும் இன்றி, இன்று பல இந்திய மொழிகளை இயக்கும் புகழ் பெற்ற இயக்குநர்கள் இன்று இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதை கெளரவமாகவும், அடையாளக் குறியீடாகவும் கருதுகிறார்கள்.

அகில இந்திய அளவில் அகன்ற காவிரியாக இருக்கும் அந்த இயக்குநர்களின் தலைக் காவிரி நமது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்தான்.

எல்வி பிரசாத், டிஆர் சுந்தரம், ஸ்ரீராமுலு நாயுடு, ஜெமினி வாசன், ஏவி மெய்யப்பன், கிருஷ்ணன் பஞ்சு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பீம்சிங், பி.மாதவன், வீணை பாலச்சந்தர், ஸ்ரீதர், ஏசி திருலோகச் சந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்தினம், என்று பல காவிய இயக்குநர்களை தன் உறுப்பினர்களாகக் கொண்ட இந்த தென்னிந்திய தாய்ச் சங்கம் இப்போது நாற்பதாவது வயதில் தனது பாதத்தைப் பதிக்கிறது.

40வது ஆண்டு விழாவை மாபெரும் விழாவாக அக்டோபர் 23ம் தேதி சனிக்கிழமை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சிறப்பாக கொண்டாட இருக்கிறது.

அந்த விழாவில் சாதனை படைத்த, சாதனை படைத்துக் கொண்டிருக்கிற இந்தியாவின் அனைத்து மொழி இயக்குநர்களும் கலந்து கொண்டு நமது இயக்குநர்கள் சங்கத்தை வாழ்த்துகிறார்கள்.

தெலுங்கு, கேரளா, கர்நாடகா மற்றும் அகில இந்திய அளவில் இருந்து வாழ்த்து வருகின்ற இயக்குநர்களை நமது இயக்குநர்கள் கெளரவிக்கிறார்கள். மேலும் இச்சங்கத்தின் மூத்த உறுப்பினர்களாக உள்ள வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற சாதனை படைத்த அனைத்து இயக்குநர்களையும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சிறப்பு செய்ய இருக்கிறது.

இந்த மாபெரும் விழாவில் இந்திய அளவிலிருந்து நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், இசைக் கலைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவான தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த் திரைப்பட தயாரிப்பளர்கள் சங்கம், நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, மற்றும் அனைத்து திரைப்பட அமைப்புகளின் ஆதரவைக் கோரி இவ்விழாவை, ஒரு மாபெரும் விழாவாக நடத்த தீர்மானித்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சீமான் வருவாரா?

இதுதொடர்பாக பேட்டி அளித்த பாரதிராஜாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். இந்த விழாவுக்கு யார் தலைமை, திமுகவா, அதிமுகவா என்றுகேட்டபோது இது அரசியல் விழா அல்ல என்றார் பாரதிராஜா.

சீமான் இயக்குநர் சங்கத்தில்உறுப்பினர், இப்போது சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்வதற்கு இயக்குநர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா, கைது குறித்து உங்களது கருத்து என்ன என்று சரமாரியாக செய்தியாளர்கள் கேட்டபோது,

சீமான் கைது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவரின் கைது விவகாரம் கட்சி ரீதியானது. அவர் அதை கட்சி ரீதியாகத்தான் அணுகுவார். அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார் பாரதிராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X