Box Office: பறந்து போ, பீனிக்ஸை பின்னுக்குத்தள்ளிய 3பிஹெச்கே.. 3 நாள் முடிவில் எந்த படம் எவ்வளவு வசூல்?
சென்னை: தமிழ் சினிமாவில் எப்படியாவது இன்னொரு லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி போல குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் பெரிய வெற்றியை சம்பாதித்து விடாதா என தயாரிப்பாளர்களும் சினிமா உலகமும் போராடி வருகிறது. ஆனால், தொடர்ந்து மொக்கைப் படங்களாக பெரிய நடிகர்கள் கொடுத்து இந்த ஆண்டு ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், பலரும் தியேட்டர் பக்கம் போகவே அஞ்சுகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளியான படங்களில் பறந்து போ படத்துக்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்தாலும், அந்த படத்தையும் சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் வெளியான 3பிஹெச்கே படம் வசூல் ரீதியாக முந்தியுள்ளது.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் திரைப்படம் தான் வசூலில் பலத்த அடி வாங்கி கடைசி இடத்தில் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பறந்து போ வசூல்: இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படம் வெளியானாலே அது வெற்றி தான் என படக்குழு கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படம் இன்னமும் தியேட்டர் ரிலீஸ் ஆகாத நிலையில், மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான் மற்றும் அஞ்சலி நடிப்பில் அவர் இயக்கிய பறந்து போ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முதல் நாளில் வெறும் 42 லட்சம் மட்டுமே அந்த படம் வசூல் செய்தது. ஆனால், அடுத்த நாளில் 121 சதவீதம் அதிகரித்து 93 லட்சம் வரை வசூல் செய்து 2 நாட்களில் 1.35 கோடி வசூலை அள்ளியது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இதுவரை வெளியான தகவலின் படி 87 லட்சம் வசூல் செய்து ஒட்டுமொத்தமாக 3 நாட்களில் 2.22 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது.

பீனிக்ஸ் 3 நாள் வசூல்: அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் உத்தமன், முத்துகுமார் உள்ளிட்ட பலர் நடித்த ஆக்ஷன் திரைப்படமான பீனிக்ஸ் வீழான் திரைப்படம் முதல் நாளில் 9 லட்சம், 2வது நாளில் 21 லட்சம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 25 லட்சம் என இதுவரை ஒட்டுமொத்தமாக 55 லட்சம் மட்டுமே வசூல் வந்திருப்பதாக sacknilk வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த வார வின்னர்: கடந்த வாரம் வெளியான படங்களில் சரத்குமார், சித்தார்த் நடிப்பில் வெளியான 3பிஹெச்கே திரைப்படம் தான் ரசிகர்களை ஓரளவுக்கு திரையரங்குகளுக்கு வரவழைத்திருக்கிறது. ஆனாலும், அந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் பெரிதாக இல்லை என்பது தான் நிதர்சனம். முதல் நாளில் 1.15 கோடி வசூல் ஈட்டிய அந்த படம் 2வது நாளில் சற்று அதிகரித்து 1.9 கோடி வசூல் ஈட்டியது. ஞாயிற்றுக்கிழமையும் 1.87 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக 4.92 கோடி சுமார் 5 கோடி அளவுக்கு தான் 3பிஹெச்கே வசூல் செய்துள்ளது. இந்த வாரமும் அடுத்த செட் படங்கள் வெளியாகவுள்ள நிலையில், இந்த படங்களின் வசூல் பெரிதாக அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு என்றே கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











