2024 Pongal Release - பொங்கலுக்கு லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர்.. எந்த படம் பந்தயம் அடிக்கும்?
சென்னை: 2024 Pongal Release Movies (2024 பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்) 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர், அரண்மனை 4 ஆகிய படங்கள் களமிறங்குவதால் செம போட்டி இருப்பதாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தாலே தமிழ் சினிமாக்கள் ரிலீஸாவது வழக்கம். ஒருகாலத்தில் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் ஏறத்தாழ 8 படங்கள்வரை ரிலீஸானது உண்டு. காலம் செல்ல செல்ல அந்த அளவுக்கு சினிமாக்கள் ரிலீஸ் ஆகாவிட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலாவது ரிலீஸாகிவருகின்றன.

இந்த வருட தீபாவளி ரிலீஸ்: அந்தவகையில் இந்த வருட தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் நடித்திருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபு நடித்திருக்கும் ரெய்டு, காளி வெங்கட், பூ ராமசாமி நடித்திருக்கும் கிடா ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றில் அனைத்து படங்களுக்குமே எதிர்பார்ப்பு இருந்தாலும் ஜப்பானுக்கும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸுக்கும் கொஞ்சம் கூடுதலாகவே எதிர்பார்ப்பு இருக்கின்றன. ஏனெனில் ராஜுமுருகன், கார்த்திக் சுப்பாராஜ் ஆகிய இரண்டு பேருமே சிறந்த இயக்குநர்கள் என்பதால் இந்த கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அடுத்த வருட பொங்கல் ரிலீஸ்: இந்த சூழலில் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கும் படங்களும் தெரியவந்திருக்கின்றன. அதன்படி சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான், ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் லால் சலாம், தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை 4 ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
கடும் போட்டி: 2024 பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் நான்கு படங்களுக்குமே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. குறிப்பாக ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியிருக்கும் லால் சலாமில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் படம் மெகா ஹிட்டாக அமைந்தது. எனவே அந்த ஹிட் வைபை கண்டிப்பாக லால் சலாமிலும் தக்க வைப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். அதிலும் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதால் இதில் அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர்.
அயலான்: அடுத்தக்கட்டமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ரவிக்குமார் இந்தப் படத்தை ஏலியனை மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறது. இதுவரை இந்திய சினிமாவில் ஏலியன் பற்றிய கதைக்களங்கள் பெரிதாக வரவில்லை என்பதால் அயலான் நிச்சயமாக டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர்: லால் சலாம், அயலானுக்கு அடுத்ததாக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் என்றால் அது கேப்டன் மில்லர். சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரனின் இயக்கம் என்பதாலும் தனுஷ் என்ற மிகச்சிறந்த நடிகர் நடித்திருப்பதாலும் இந்தப் படம் எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. படத்தின் கதைக்களமும் போராட்ட களத்தை தொட்டிருப்பதால் ஆக்ஷன் காட்சிகளுக்கோ, உணர்ச்சி கிளப்பும் வசனங்களுக்கோ பஞ்சம் இருக்காது என்பதால் இந்தப் படமும் டஃப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனை 4: இந்த லிஸ்ட்டில் கடைசியாக இருப்பது சுந்தர் சி இயக்கத்தி உருவாகியிருக்கும் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர்.சி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கு முன்னர் வெளியான அரண்மனையின் மூன்று பாகங்களில் முதல் இரண்டு பாகங்களுக்கு பெரும் வரவேற்பும் மூன்றாவது பாகத்துக்கு சுமாரான வரவேற்பும் கிடைத்தது. எனவே அரண்மனை 4 படத்தை சுந்தர் சி எப்படி எடுத்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருப்பதால் இந்தப் படமும் ஓரளவு டஃப் கொடுக்கும் என்றே கருதப்படுகிறது.
2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசும், அஜித் நடித்த துணிவும் ரிலீஸாகின. அவற்றில் இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றதாக கூறப்பட்டாலும் விமர்சன ரீதியாக துணிவு படம் ஒரு படி மேலே நின்றது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருட பொங்கலுக்கு நான்கு படங்கள் ரிலீஸாகின்றன. எந்தப் படம் பந்தயம் அடிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











