தீபாவளிக்கு ரிலீசாகும் கொல மாசு திரைப்படங்கள்... 4 படங்கள் ரெடி
சென்னை : இந்த ஆண்டு தீபாவளிக்கு இதுவரை 4 திரைப்படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்தே திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
இவை அனைத்தும் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி திரைப்படங்கள்
தீபாவளி என்றாலே பட்டாசுகள், புதுத்துணி மட்டும் இல்லீங்க, புதிய படங்களும் வரிசை கட்டும். விதவிதமான இனிப்புகள், உணவுகள் என்று வெளுத்து வாங்கிவிட்டு புதுப் படத்திற்கும் குடும்பத்துடன் சென்று வருவதை ரசிகர்கள் காலம் காலமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இனிக்காத தீபாவளி
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தீபாவளி அவ்வளவாக இனிக்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தியேட்டர்கம் திறக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு தியேட்டர்களில் படங்கள் வரிசை கட்டுகின்றன. இதில் முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படம் தீபாவளியையொட்டி ரிலீசாகிறது.

தீபாவளிக்கு அண்ணாத்தே ரிலீஸ்
நவம்பர் 4ம் தேதி அண்ணாத்தே படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியுடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள அண்ணாத்தே படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் ஓடிடியில் இல்லாமல் தியேட்டரில் ரஜினி படத்தை பார்ப்பதே ரசிகர்களுக்கு அலாதி சுகத்தை அளிக்கும்.

மாநாடு படம் ரிலீஸ்
இதையடுத்து சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள மாநாடு படம் தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரிலீசுக்காக இந்த படம் காத்திருந்தாலும் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது.

வா டீல், எனிமி படங்கள் ரிலீஸ்
இதேபோல அருண் விஜய்யின் வா டீல் மற்றும் விஷால், ஆர்யா இணைந்து மிரட்டும் எனிமி ஆகிய படங்களும் தீபாவளி ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இன்னும் தீபாவளிக்கு ஒரு மாதம் உள்ளதால் மேலும் சில திரைப்படங்கள் இதில் வரிசை கட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு இனிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











