பொங்கலுக்கு வெடிக்கும் பட்டாஸ்.. இந்த 5 காரணங்களுக்காக பட்டாஸ் படத்தை தாராளமாக பார்க்கலாம்!
சென்னை: தனுஷின் பட்டாஸ் படம் பொங்கல் பண்டிகை விருந்தாக நாளை திரைக்கு வருகிறது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா, சினேகா, நாசர், நவீன் சந்திரா மற்றும் முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கடந்த வாரம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் சோலோ ரிலீஸ் ஆனது போல நாளை தனுஷின் பட்டாஸ் படமும் பெரிய படங்களின் மோதல் இல்லாமல் சோலோ ரிலீஸ் ஆகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்கா கமர்ஷியல் என்டர்டெயின் மென்ட்டாக உருவாகியுள்ள பட்டாஸ் படத்தை தியேட்டரில் பார்க்க முக்கியமான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.

மொரட்டு தமிழன்
அசுரன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டாஸ். இந்த படத்தில் அப்பா மகன் என தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்க்கு ஒரு ஆளப்போறான் தமிழன் பாடல் போல, நடிகர் தனுஷுக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘மொரட்டு தமிழன் டா' பாடல் உருவாகியுள்ளது. லிரிக் வீடியோவே கூஸ்பம்ப்ஸ் கொடுத்த நிலையில், தனுஷ் ரசிகர்கள், தியேட்டரில் இந்த பாடலை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.

புது வரவு
டோலிவுட் இளைஞர்களை தனது அழகு மற்றும் நடிப்பால் கவர்ந்த நடிகை மெஹ்ரின் பிர்ஸடா முதன்முறையாக கோலிவுட்டில் பட்டாஸ் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். ஜிகிடி கில்லாடி பாடல் புரொமோவில் தனது க்யூட் நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ள மெஹ்ரினின் நடிப்பை காண ரசிகர்கள் பட்டாஸ் படத்தை பார்க்க ஆவலோடு உள்ளனர்.

பொங்கல் திரைப்படம்
பொங்கல் பண்டிகை அன்று புதுப்படத்தை பார்த்து கொண்டாட பல இளைஞர்கள் முடிவு செய்து வைத்திருப்பார்கள். ரஜினியின் தர்பார் படத்தை ஏற்கனவே ஒரு வார காலமாக பலரும் பார்த்துள்ள நிலையில், பட்டாஸ் படத்தை பொங்கல் கொண்டாட்டமாக தியேட்டரில் ஜாலியாக குடும்பத்துடன் பார்க்கலாம்.

வெற்றிமாறன் பட்டறை
இயக்குநர் வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்த இயக்குநர் துரை செந்தில்குமார், இயக்கிய எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி என மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. கொடி படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை டபுள் ரோலில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். நிச்சயம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக பட்டாஸ் இந்த பொங்கலுக்கு வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ்
தனது மிரட்டலான நடிப்பாலும், ஜாலியான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைக்கும் திறமை நடிகர் தனுஷுக்கு ஏராளமாக இருக்கிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ், பாக்ஸிங் என நடிப்பில் கலந்து கட்டி அடிக்க நிறைய இடமும் தனுஷுக்கு கிடைத்திருப்பதால், தனுஷின் பட்டாஸ் படத்தை தியேட்டரில் தாராளமாக இந்த பொங்கலுக்கு கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











