தேர்தல் வாரத்தில் இறைவி, கோ 2, இது நம்ம ஆளு, மருது... எடுபடுமா பாக்ஸ் ஆபீஸில்?
சென்னை: கத்திரி வெயில், ஐபிஎல் போட்டிகள் , தேர்தல் பரபரப்பு போன்ற காரணங்களால் பல திரையரங்குகள் காத்து வாங்கிக் கொண்டிருந்தாலும் கூட, படங்கள் வெளியீட்டில் எந்தக் குறையும் இல்லை.
வருகின்ற வாரம், அதற்கடுத்த வாரம் என 2 வார இடைவெளியில் மொத்தம் 6 தமிழ்ப்படங்கள் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

இது நம்ம ஆளு, இறைவி, கோ 2, பென்சில், மருது, மதகஜராஜா என 6 படங்கள் தற்போது வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளன. இதுதவிர கடைசி நேரத்தில் மேலும் பல படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல்
தமிழ்நாட்டில் வருகின்ற 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்முறையாக 6 முதல்வர் வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டி வருகிறது. இதுதவிர நியூஸ் சேனல்களில் நடைபெறும் விவாதங்கள், கருத்துக் கணிப்புகள் போன்றவை மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளன.
வெயில்
சட்டமன்றத் தேர்தலுடன், வெயிலும் சேர்ந்து கொள்ள மக்கள் வெளியில் நடமாடுவதே வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் படங்களின் வசூல் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் கூட படங்கள் வெளியாவதில் எந்தக் குறையும் இல்லை.
ஏப்ரல் மாதம்
ஜனவரி தொடங்கி மார்ச் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இதில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை வெறும் 5 மட்டுமே. இதேபோல கடந்த ஏப்ரல் 22 படங்கள் வெளியானது. இதில் விஜய்யின் தெறி தவிர மற்ற படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை.
24
இதேபோல மே மாதத்தை சூர்யாவின் 24 நேற்று வெளியாகி தொடங்கி வைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட், அதிக திரையரங்குகள், பரவலான விளம்பரங்கள் என்று திட்டமிட்டு இப்படத்தை வெளியிட்டுள்ளனர். கலவையான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.
மதகஜ ராஜா
தொடர்ந்து விஷாலின் மதகஜராஜா, பென்சில், மருது, இறைவி, கோ 2, இது நம்ம ஆளு என 2 வார இடைவெளியில் சுமார் 6 படங்கள் வெளியாகவுள்ளன. இதில் விஷாலின் மருது தவிர மற்ற எல்லா படங்களுமே நீண்ட வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல், வெயில், ஐபிஎல் எல்லாவற்றையும் தாண்டி இப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











