விஷால் சொன்னதை கேட்கல.. 3 மாதத்தில் தலையில் துண்டுப்போட்ட 60 தயாரிப்பாளர்கள்.. ஃபிளாப் பரிதாபங்கள்!
சென்னை: 4 கோடி ரூபாய் எல்லாம் வைத்துக் கொண்டு புதிதாக யாரும் படம் தயாரிக்கவோ இயக்கவோ வரவேண்டாம் என நடிகர் விஷால் சொன்னபோது பல தயாரிப்பாளர்கள் விஷால் எப்படி அப்படி சொல்லலாம் என கண்டனம் தெரிவித்தனர். ஆனால், 2025ம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிவதற்குள் 60 படங்கள் ஃபிளாப் என்கிற அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது.
மொத்தமாக வெளியான 64 படங்களில் வசூல் ரீதியாக 4 படங்கள் தான் தேறியது என்கின்றனர். ஆனால், பொங்கல், காதலர் தினம் என பண்டிகை நாட்களை குறிவைத்து வெளியான படங்களில் இதுவரை ஒரு படம் கூட 200 கோடி ரூபாய் வசூலை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியான நிலையில், தமிழ் சினிமாவில் தரமான கதைகளும் தரமான மேக்கிங்கிற்கும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் தான் சினிமாவை வியாபாரமாக மட்டுமே பார்த்து கோடிகளில் முதலீடு செய்து பல தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்டுக் கொண்டு திரிகின்றனர் என்கிற உண்மை ஓங்கி அறையத்தான் செய்கிறது.
60 படங்கள் தோல்வி: பாலா இயக்கத்தில் வெளியான வணங்கான், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி நடித்து வெளியான நேசிப்பாயா உள்ளிட்ட படங்கள் பொங்கல் ரிலீஸை குறிவைத்து வெளியாகின. ஆனால், அதில் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை. சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் நடித்த மத கஜ ராஜா திரைப்படம் 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஒவ்வொரு வாரமும் சிறு பட்ஜெட்டில் அரை டஜன் படங்கள் வெளியாகி வருகின்றன. ஜனவரி மாதம் மட்டும் 26 படங்கள் வெளியான நிலையில், அதில் மத கஜ ராஜா மற்றும் குடும்பஸ்தன் படங்கள் மட்டுமே தேறியது என்பதெல்லாம் எந்தளவுக்கு தமிழ் சினிமாவுக்கு தலை குனிவான விஷயம் என சினிமா வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

ஒரு ஷோ கூட ஓடல: இதில், 40க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒரு ஷோ கூட ஓடாமல் தோல்வியை தழுவியது தான் ரொம்பவே வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு படத்தை உருவாக்க நூற்றுக்கணக்கான மக்கள் உழைத்து வந்தாலும், இயக்குநர் திறம்பட அந்த படத்தின் அவுட்புட்டை கொண்டு வந்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்கும் வேலையை செய்யவில்லை என்றால் இப்படித்தான் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவார்கள் என்கின்றனர்.
டிராகன் மட்டுமே பிளாக்பஸ்டர்: பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளியான அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. அதிகபட்சமாக உலகளவில் அந்த படம் 132 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படம் மட்டுமே கடந்த 3 மாதங்களில் பிளாக்பஸ்டர் படம் என்கிற அந்தஸ்த்தை பெற்றுள்ளது என்கின்றனர்.
மார்ச்சில் வீர தீர சூரன்: ஜனவரியில் மத கஜ ராஜா 50 கோடியை கடந்த நிலையில், மார்ச் மாதம் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படம் மட்டுமே 52 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. மற்றபடி மார்ச் மாதம் வெளியான படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை.

குட் பேட் அக்லி காப்பாற்றுமா?: இந்த ஏப்ரல் மாதமும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தைத் தவிர பாக்ஸ் ஆபீஸை நிரப்ப பெரிதாக படங்கள் இல்லை. ஏப்ரல் 24ம் தேதி வடிவேலு, சுந்தர். சி நடிப்பில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. வழக்கம் போல வாரத்துக்கு டஜன் கணக்கில் படங்கள் வந்து வசூலை குவிக்க முடியாமல் போகும் நிலை தான் உள்ளது என்கின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில்: 4 கோடி முதல் 10 கோடி வரை குறைந்த பட்ஜெட்டில் லப்பர் பந்து, வாழை போல படங்களை கொடுக்க முடிந்தால் தயாரிப்பாளர்கள் பணத்தை நம்பி செலவு செய்யலாம் என்றும் முயற்சித்து பார்க்கிறேன் என பணத்தைக் கொட்டிவிட்டும் வட்டிக்கு வாங்கி படம் எடுத்தும் வாழ்க்கையை தொலைத்துவிட வேண்டாம் என்கிற எச்சரிக்கை மணி கோலிவுட்டில் பலமாக அடித்துக் கொண்டிருக்கிறது. சில படங்கள் ரிலீஸ் ஆனாலே வெற்றி தான் என்றும் ரிலீஸ் ஆக முடியாமல் 100க்கும் மேற்பட்ட படங்கள் காத்துக் கொண்டிருப்பது தனிக்கதை.


Click it and Unblock the Notifications











