61st grammy awards: மீண்டும் மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான்.. பெருமைப்பட்ட ப்ரியங்கா சோப்ரா!
61வது கிராமி விருது விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: கிராமி விருது வழங்கும் விழாவில் தன் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவில், சிம்பல், ஃபாலுஸ் பஜார் மற்றும் பிலவ்டு ஆகிய இசை ஆல்பங்களுக்காக பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட லண்டனைச் சேர்ந்த பிரசாந்த் மிஸ்ட்ரி, நியூயார்க்கைச் சேர்ந்த பால்குனி ஷா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சாத்னம் கவுர் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் வந்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனது மகள் ரஹீமாவுடன் அவர் கலந்து கொண்டார். இருவருமே கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விழா அரங்கில் டோலி பார்டோனுக்காக நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியான லேடி காகாவின் அபார நடிப்பிலான ''ஷாலோ'' வீடியோவையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு பதில் பதிவு வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதில் அவர், 'மிகவும் பெருமைப்படுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு தனது ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக இரு கிராமி விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார் என்பது இங்கே நினைவுக்கூரத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை தாராவி பகுதியில் நடைபெற்ற விழாவில் மகளுடன் கலந்து கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது மகளின் உடை காரணமாக அவரை நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்தனர். பின்னர் இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்திலேயே பதிலடி கொடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் தனது குடும்பத்தினர் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











