62 வருட கமலிஷம்… கையில் வாளுடன் கெத்தான போஸ்… விக்ரம் பட நியூ போஸ்டர் !
சென்னை: கமல்ஹாசன் சினிமாவுக்கு வந்து 62 வருடம் ஆனதை ஒட்டி, அவரை கவுரவப்படுத்தும் விதமாக லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கையில் வாளுடன் இருக்கும் கெத்தான போஸ்டரை வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் அதில் Once a lion always a lion என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன்
உலகமெங்கிலும்... உன்னை மிஞ்சிட யாரு... உன்னைப் பெற்றதில்... பெருமை கொள்ளுது நாடு... உலக நாயகனே.... என்ற பாட்டுக்கு ஒட்டு மொத்த சொந்தக்காரர் உலகநாயகன் நம் கமலஹாசன் தான்.

களத்தூர் கண்ணம்மா
1959-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பீம்சிங் இயக்கி வெளியான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். இப்படத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்திருந்தனர். அந்த படத்தில் மழலை முகம் மாறாமல் பாடும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் இன்று வரை பசுமை மாறாமல் நெஞ்சில் நிற்கிறது.

62yearsofkamalisam
அன்று தொடங்கிய இவரின் பயணம் 62 ஆண்டுகள் ஆகியும் தொடர்கிறது. இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கமல் ஹாசன் திரையுலகில் சாதிக்காத விஷயங்களே இல்லை என்று தான் சொல்லவேண்டும். கமல்ஹாசன் திரையுலகிற்கு அறிமுகமாகி இன்றுடன் (ஆகஸ்ட் 12) 62 ஆண்டுகள் ஆகிறது. இந்த நாளை அவரது ரசிகர்கள் ஆண்டுதோறும் காமன்டிபிக்களை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம்
மாநகரம், கைதி, மாஸ்டர் என வெற்றிப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், 3 முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தொடங்கியது. இதில் இயக்குனர் லோகேஷ், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். மாஸ்டர் படத்தின் மகத்தான வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து இயக்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
கமல் தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பிஸியாக இருந்ததால், தேர்தலுக்கு பிறகு இப்படத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமானதால், படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது படப்பிடிப்பு படுஜோராக நடந்து வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிகவும் மகிழ்வித்தது. இதில், விஜய் சேதுபதி, கமல், ஃபகத் பாசில் ஆகிய மூவரின் முகமும் இடம் பெற்றிருந்தது. உலக நாயகன் உடன் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர்களான ஃபகத் பாசில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கமலின் நெருங்கிய நண்பரான ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமன் இப்படத்தில் கமலின் மகனாக நடிக்க உள்ளார்.

கையில் வாளுடன்
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் , தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கமல் ஹாசனின் 62 ஆண்டுகால சினிமா பயணத்தை சிறப்பிக்கும் விதமாக கையில் வாளுடன் இருக்கும் கெத்தான போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், "சிங்கம் எப்பவுமே சிங்கம்தான்" என குறிப்பிட்டுள்ளார் இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











