3 படங்கள் 10 அவார்டுகளை அள்ளிய தமிழ் படங்கள்
டெல்லி: அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழில் இருந்து 3 திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளது.
சிறந்த நடிகர், சிறந்த நடிகை, பின்னணி இசை, சிறந்த திரைப்படம் உட்பட மேலும் பல விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி, அதிலிருந்து விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் அனைவரையும் ஆச்சரியப்படுத்து வகையில் 3 தமிழ்ப் படங்கள், மொத்தம் 10 விருதுகளை வென்று வரலாறு படைத்துள்ளது.

சூரரைப் போற்று 5
சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மொத்தமாக 5 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சுதா கொங்கரா இயக்கிய 'சூரரைப் போற்று' ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருந்தது. இத்திரைப்படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த சூர்யா சிறந்த நடிகராகவும், அபர்ணா பலமுரளி சிறந்த நடிகையாகவும் தேர்வாகியுள்ளனர்.

மிரட்டிய ஜிவி. பிரகாஷ்
'சூரரைப் போற்று' படத்தின் வெற்றிக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் அவருக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. சிறந்த திரைக்கதைக்காக இயக்குநர் சுதா கொங்கராவுடன் ஷாலினிக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. இதுமட்டும் போதுமா என்ன இறுதியாக சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் 'சூரரைப் போற்று' படத்திற்கே கிடைத்துள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் சூர்யா உள்ளிட்ட சூரரைப் போற்று குழுவினருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் 3
பெண்ணடிமைத்தனத்தை பின்னணியாகக் கொண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் மொழிப் படம் என்ற தேசிய விருதையும், சிறந்த எடிட்டிங்கிற்காக ஸ்ரீகர் பிரசாத்துக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற லக்ஷ்மி, சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெறுகிறார். இத்திரைப்படமும் நேரடியாக சோனி ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

யோகிபாபுவின் மண்டேலா
அரசியல் நய்யாண்டி பின்னணியில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருந்த 'மண்டேலா' திரைப்படம் 2 விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மடோனி அஸ்வின் சிறந்த வசனத்திற்காக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சிறந்த அறிமுக இயக்குநர் என்ற விருதும் மடோனி அஸ்வினுக்கே கிடைத்துள்ளது. ஒரேயொரு ஓட்டுக்காக சாதியை மறந்து இருபிரிவினர் அரங்கேற்றும் கூத்துகளை பகடியாக விமர்சித்தது 'மண்டேலா' திரைப்படம். இப்படமும் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

சிறப்பான சம்பவம்
ஒட்டுமொத்தமாக தமிழில் வெளியான 3 படங்கள் 10 விருதுகளை வென்றுள்ளது, தமிழ்த் திரைத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுகளை வென்ற கலைஞர்களுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தமிழ் சினிமாவிற்கு மிகவும் ஆரோக்கியமான விசயம் என, சினிமா ஆர்வலர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் விருதுகளை வென்று மூன்று திரைப்படங்களுமே வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியனாதையும் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications