இளையராஜா பிறந்த நாளில் 71 ஆயிரம் மரக் கன்றுகள்.. முதல் கன்றை நட்டு தொடங்கி வைக்கிறார் ராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜா பிறந்த நாளையொட்டி 71001 மரக் கன்றுகளை அவரது ரசிகர்கள் நடுகிறார்கள். முதல் கன்றை இளையராஜாவே தன் கையால் நட்டு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் பயணத்தைத் தொடங்கியவர் இளையராஜா.

தமிழ் திரையிசை என்ற பெயரில் இந்திப் பாடல்களின் ரீமேக்குகள் ஆதிக்கம் செலுத்தி வந்த எழுபதுகளில், தமிழனின் இசையை கொடிகட்டிப் பறக்க வைத்தவர்.
40 ஆண்டுகாலம் இசைத் துறையில் கோலோச்சும் ராஜா, இன்று உலகின் தலை சிறந்த இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிறார். அவரது பல இசைக் கோர்வைகள் மேலை நாட்டாரை பிரமிப்பில் ஆழத்தி வருகின்றன.
தனி இசையமைப்பாளராக 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்து இளையராஜா, இந்த ஆண்டு தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இந்த முறை அவரது பிறந்த நாளை மிக பிரமாண்டமாகக் கொண்டாடுகின்றனர் ராஜாவின் ரசிகர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் மதுரையில் வைத்து தனது ரசிகர் மன்றத்தை முறைப்படி தொடங்கி வைத்தார் ராஜா. ஒரு மாத காலத்துக்குள்ளாக இந்த ரசிகர் மன்றத்தில் கவிஞர்கள், பாடகர்கள், பாடகியர், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் விரும்பி இணைந்து வருகின்றனர்.
இந்த ரசிகர் மன்றம் சார்பாக இளையராஜாவின் பிறந்த நாள் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக தன் பிறந்த நாளில் ஆடம்பர செலவுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வார் இளையராஜா. அதைவிட மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்யுங்க என்பதே ஆண்டுதோறும் அவர் விடுக்கும் பிறந்த நாள் செய்தி.
இந்த முறை அவரது விருப்பத்துக்கேற்ப, அவரது பிறந்த நாளன்று 71001 மரக்கன்றுகளை நட இளையராஜா ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கன்றுகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடப்படுகிறது.
தனது பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி திங்களன்று காலை 9 மணிக்கு முதல் மரக் கன்றை இளையராஜா தன் கையால் நட்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











