85 வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய கவுண்டமணி.. சமுத்திரம் படத்தில் நடித்ததை மறக்க முடியுமா?
சென்னை: மனோஜ் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் இளம் வயதிலேயே மாரடைப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் 50 வயதை கூட கடக்க முடியாமல் உயிரிழந்து வருவது சோகத்தையும் சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் உடல் நலத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்கிற அலாரத்தையும் அடித்துக் கொண்டே இருக்கின்றன.
பாரதிராஜாவின் அறிமுக படமான 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவியுடன் சேர்ந்து கவுண்டமணியும் நடித்திருந்தார். தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் என பல படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜாவுடன் இணைந்து கவுண்டமணி நடித்த சமுத்திரம் படத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். தள்ளாத வயதிலும் தனது மகன் போன்ற மனோஜ் மறைந்த செய்தியை அறிந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் கவுண்டமணி.
மனோஜ் பாரதிராஜா மறைவு: 1976ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மகனாக பிறந்த மனோஜ் குமார் சினிமாவில் தாஜ்மகால் படத்தின் மூலம் 1999ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். மணிரத்னம் திரைக்கதை எழுத பாரதிராஜா இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த படம் வெளியானது. இன்றளவும் "திருப்பாச்சி அருவாள", "சொட்டச் சொட்ட நனையுது தாஜ்மகால்" உள்ளிட்ட அத்தனை பாடல்களும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாகவே உள்ளன. இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்துவிட்டு வீட்டுக்கு நலமுடன் வந்த மனோஜ் திடீரென நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது.
கவுண்டமணி நேரில் அஞ்சலி: 83 வயது பாரதிராஜாவை விட வயதில் 2 வருடம் மூத்த 85 வயது நடிகர் கவுண்டமணி தனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகளை கொடுத்த இயக்குநர் இமயத்தின் மகன் இப்படி சிறு வயதில் உயிரிழந்துவிட்டாரே என்கிற சோகத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். மனோஜ் பாரதிராஜா தாஜ்மகால் படத்திற்கு பிறகு கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார், முரளி, அபிராமி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த சமுத்திரம் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கவுண்டமணிக்கும் மனோஜுக்கும் காம்பினேஷன் காமெடி காட்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்திருக்கும். சமுத்திரம் படத்தில் நடித்த முரளி பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மறைந்து விட்டார். இப்போது மனோஜும் காலமானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பி. வாசு முதல் செந்தில் வரை: நடிகர் கவுண்டமணியை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் செந்தில், இயக்குநர் பி. வாசு, நடிகர் விதார்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் நேரில் வந்து மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது மகனின் உடல் அருகே அமர்ந்துக் கொண்டு கொஞ்சமும் விலகாமல் மகனுடன் இறுதியாக பேசிக் கொண்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியாமல் ஒவ்வொரு பிரபலங்களாக ஆறுதல் சொல்லி வருகின்றனர். அந்த காலத்து ஜெனரேஷன் நடிகர்கள் உடல் நலத்தில் காட்டிய அக்கறையை இந்த காலத்து நடிகர்கள் காட்டுவதில்லை என்றும் கூறி செல்கின்றனர்.


Click it and Unblock the Notifications











