twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    100 படங்களுக்குப் பிறகுதான் இளையராஜா ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார்!- பஞ்சு அருணாச்சலம்

    By Shankar
    |

    Nandha Nandhitha Audio Launch
    தமிழ் சினிமா வளர்ச்சியடைந்துள்ளதாக சில சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இது போலித்தனமானது. சினிமாவுக்கு நல்லதல்ல, என்றார் தமிழ் சினிமா ஜாம்பவான்களில் ஒருவரான பஞ்சு அருணாச்சலம்.

    சூப்பர் டீம் சினிமாஸ் தயாரிக்கும் 'நந்தா நந்திதா' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேபில் நடந்தது. முதல் இசைத் தட்டை பஞ்சு அருணாசலம் வெளியிட, தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பெற்றுக்கொண்டார்.

    விழாவில், பஞ்சு அருணாசலம் பேச்சு, திரையுலகினருக்கே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

    அவர் பேசுகையில், "முன்பெல்லாம் வருடத்துக்கு 60 படங்கள்தான் திரைக்கு வரும். அதில், 30 படங்கள் நஷ்டம் அடையாது. 20 படங்கள் நூறு நாட்கள் ஓடும். 5 படங்கள் வெள்ளிவிழா ஓடும். 5 படங்கள் மட்டும் நஷ்டம் அடையும். ஒரு படம் தயாரிக்க முப்பதாயிரத்தில் இருந்து நாற்பதாயிரம் அல்லது சில லட்ச ரூபாய்தான் ஆகும். முப்பது அல்லது நாற்பது நாட்களில் படம் தயாராகி விடும்.

    ஆனால் இப்போது, வருடத்துக்கு 160 படங்கள் திரைக்கு வருகின்றன. அதில், மூன்று அல்லது நான்கு படங்கள்தான் ஓடுகின்றன. ஒரு படம் தயாரிக்க 80-ல் இருந்து 200 நாட்கள் வரை ஆகிறது. முன்பு திறமைக்கு மதிப்பு இருந்தது. இப்போது பணத்துக்குத்தான் மதிப்பு இருக்கிறது. பணத்தை வைத்துதான் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது. போலித்தனமான வெற்றிகள் அதிகமாகி விட்டன. இந்த போலித்தனமான வெற்றியும் வளர்ச்சியும் சினிமாவுக்கு உதவுமா?

    இளையராஜா சம்பளம்

    'அன்னக்கிளி' படத்துக்கு இசையமைக்க இளையராஜாவுக்கு நான் கொடுத்த சம்பளம் வெறும் மூவாயிரத்து ஒன்றுதான். அவர், 100 படங்களுக்கு இசையமைத்த பின்புதான் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினார். அதுவரை ரூ 25 ஆயிரம் பெற்றுக் கொண்டார். சம்பளத்தை விட சாதனையைத்தான் அவர் பெரிதாக நினைத்தார்.

    ஆனால் இப்போது, படம் இரண்டு வாரம் ஓடி கொஞ்சம் வசூல் செய்தால் போதும். அந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகி, டைரக்டர் தங்களின் அடுத்த படத்துக்கு 75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை சம்பளம் கேட்கிறார்கள். இசையமைப்பாளர்கள் கோடிகளில் சம்பளம் பேசுகிறார்கள்.

    யார் திறமைசாலி என்பதில் போட்டி இல்லை. யார் அதிக சம்பளம் வாங்குவது? என்பதில்தான் இப்போது போட்டி இருக்கிறது. இது நல்லதா... சினிமா எப்படி வளரும்?," என்றார்.

    தயாரிப்பாளர்களை கரை சேர்ப்பேன்

    படத்தின் இயக்குநர் ராம் ஷிவா பேசுகையில், "நான் சினிமாவில் மிகுந்த கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். கதை, திறமை எல்லாம் இருந்தும் அதைக் காட்ட வழியின்றி தவித்தபோது, என் நண்பர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் படம் தயாரிக்க முன்வந்தார்கள்.

    அவர்கள் என்னிடம் இரண்டு வாய்ப்புகளை முன் வைத்தனர். ரூ 25 லட்சம் தருகிறோம். மனைவி மக்களோடு ஊருக்குப்போ. பணத்தை திருப்பிக் கூட தர வேண்டாம். அல்லது ரூ 40 லட்சம் தருகிறோம், படம் பண்ணு என்றனர். அவர்களிடம், இன்னும் கொஞ்சம் மேலே பணம் போட்டு, நீங்களே தயாரிப்பாளராக இருங்கள். நான் ஒரு படம் செய்கிறேன். நிச்சயம் ஜெயித்துக் காட்டுகிறேன், என்றேன். நம்பி வந்தனர். நான் நேராக கேயாரிடம் அழைத்துப் போய் வழிகாட்டச் சொன்னேன். அவரது வழிகாட்டுதலில் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

    என்னை நம்பி வந்த அந்த மூன்று தயாரிப்பாளர்களையும் நஷ்டமில்லாமல் கரை சேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது," என்றார்.

    நடிகர் நாசர், கேயார், இயக்குநர் ஜனநாதன், இசையமைப்பாளர் எமில், ஒளிப்பதிவாளர் சீனிவாசரெட்டி, படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் ஆகியோரும் விழாவில் பேசினார்கள்.

    பட அதிபர்கள் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் ஆகிய மூவரும் வரவேற்றார்கள்.

    English summary
    Veteran Tamil producer Panchu Arunachalam criticised that the present artists and technicians in Tamil Cinema are only targeting money. In Nandha Nandhitha audio launch, he says, "The present generation artists always trying to raise their salary, not the standard of cinema. Remember, Isaignani Ilayaraja took more than 100 films to raise his salary from Rs 25000 to 1 lakh. That is his passion towards cinema. Nowadays, I couldn't seen such passion in the Industry."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X