96 இயக்குநருடன் இணையும் விக்ரம்?.. அப்போ அந்தப் படம் அவ்வளவுதானா?.. என்ன நடக்குது?
சென்னை: நடிகர் விக்ரம் கடைசியாக வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்தார். அருண் குமார் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஏனெனில் இதற்கு முன்னதாக அருண் இயக்கியிருந்த சித்தா திரைப்படத்தின் ரிசல்ட் அப்படி. எனவே அதேபோன்றொரு ஒரு மெகா ஹிட்டை விக்ரமுக்கு கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
இரட்டை குதிரையில் சவாரி: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
கவிழ்த்த தங்கலான்: சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றாலும் ஒரு தரமான கமர்ஷியல் ஹிட்டை அவர் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்தபோது; கண்டிப்பாக இந்தப் படம் தன்னையும், தனது கரியரையும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்றுதான் நம்பினார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு காரணம் இரஞ்சித்தின் மேக்கிங் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது.

வீர தீர சூரன்: விக்ரம் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளையே செய்துவந்தார். தில், தூள், சாமி, ஜெமினி போன்ற முழு நீள கமர்ஷியல் படங்களில் நடிப்பதையே நிறுத்தியிருந்தார். எனவே அந்த ஜானரில் ஒரு படம் நடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்க முடிவு செய்தார் அவர். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இயக்குநர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமாரை. ஏனெனில் இந்த மூன்று படங்களுமே தரமான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவும் அம்போதான்: எனவே கண்டிபாக விக்ரமுக்கு வீர தீர சூரன் படம் மெகா ஹிட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸில் நடந்த பிரச்னை படத்துக்கு முதல் மைனஸாக மாறிவிட்டது. அதேபோல் படத்தின் மேக்கிங்கிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது. படமானது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும் விக்ரமின் முந்தையை சில படங்களை காட்டிலும் நல்ல பெயரைத்தான் பெற்றது.
பிரேம்குமார் இயக்கத்தில்?: அடுத்ததாக அவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி 96, மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் சமீபத்தில் விக்ரமை சந்தித்து கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 96 படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குவதற்கும் பிரேம் ரெடியாக இருக்கிறார். அதேசமயம் விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. சூழல் இப்படி இருக்க விக்ரமுக்கு அவர் கதை சொல்லியிருப்பதால் ஒருவேளை 96 பார்ட் 2வை ட்ராப் செய்துவிட்டார்களோ என்ற கேள்வியை முன்வைத்துவருகிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











