”வன்மமும் வக்கிரமும் கொண்ட கேள்வி” 96 பட நாயகிக்கு ஆதரவாக களமிறங்கிய 96 பட இயக்குநர் பிரேம்குமார்!
சென்னை: ஒரு முட்டாள்தனமான கேள்வி கேட்ட யூடியூபருக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தா நடிகை கௌரி கிஷன். அதாவது நடிகையின் எடை என்ன என்பதை மறைமுகமாக கேட்ட யூடியூபர், தனது கேள்வி வழக்கமானதுதான் என்றும், நடிகைகளிடம் இந்திய பொருளாதாரம் குறித்தும் உலக அரசியல் குறித்துமா கேள்வி எழுப்ப முடியும் என்று அபத்தமாக முட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கெளரி கிஷனுக்கு ஆதரவாக ஒரு குரலும் ஒலிக்கவில்லை. ஆனாலும் அவர் முட்டாள்தனமாக கேள்வி எழுப்பிய யூடியூபரைப் போட்டு விளாசிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
யூடியூபரின் முகத்துக்கு நேராகவே உங்கள் கேள்வி முட்டாள்தனமானது என்று பளிச்சென்று சொன்ன அவரது தைரியமும், அவர் பேசிய சொற்களும் பாராட்டுதலுக்குரியது. இத்தனை ஆண்டுகால சினிமா உலகில் பல நடிகைகளும் கொடுக்கத் தவறிய பதிலடி அது. இந்நிலையில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாக திரைபிரபலங்கள் தொடங்கி சென்னை பத்திரிகையாளர் மன்றம் வரை பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெளரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அநாகரீகமான கேள்வி கேட்ட யூடியூபரையும் கண்டித்துள்ளார்.

அவரது பதிவில், " நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது. OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும் போது கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல்.
தகுதி: செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும். இந்த செயலை செய்தவர்களை நான் பத்திரிக்கையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம். எல்லோரை போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை. இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
மௌனம்: தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை. ஒருவேளை எதிர்த்து பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால் அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும்.
இழிசெயல்: இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி! இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், யூடியூபர்ஸ் மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்" என்று பளிச்சென்று சொல்லியுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











