அழகிய காதல் காவியம் - இப்படிக்கு மணி
சென்னை: காதலை பலவிதமாக இயக்குவதில் செல்வராகவன் கைதேர்ந்தவர். அழகாக காட்டுவதற்கு கெளதம் மேனன் என வெள்ளித்திரையில் பல இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் காதல் படங்களை தடம்பதித்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் கடந்த ஞாயிறு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளிவந்த இப்படிக்கு மணி என்ற குறும்படமும் காதலை மிக அழகாக காட்டியுள்ளது.
நடிகர், நடனர் என திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் கனா காணும் காலங்கள் ராகவேந்திரா தான் இக்குறும் படத்தினை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் அருண்(மணி) மற்றும் விலாசினி(செல்வி) தான் கதையின் உயிரோட்டங்கள். இந்த உயிரோட்டங்களுக்கு உயிர் கொடுத்தது பாடகர் சாய்சரண். இவர் சூப்பர் சிங்கரில் வெற்றிபெற்றவர் ஆவார்.

ஒரு விபத்தில் தன்னுடைய பாதி முகத்தினை தீக்காயங்களால் இழந்து, எல்லோராலும் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணை ஒரு மனநலம் பாதித்த மணி என்ற ஒரு இளைஞன் காதலிக்கிறார். அப்பெண்ணுடன், கற்பனையிலே வாழ்ந்து தன் கையிலும், அப்பெண்ணின் பெயரை பச்சை குத்திக்கொள்கிறார்.
சாலையில் நடக்கையில் மணி மயங்கிவிழுவதால், அவருடைய டைரி ரோட்டிலே கிடக்க, அது செல்வியின் கையில் கிடைக்கிறது. அந்நேரம் மணியை குணப்படுத்த வெளிநாடு அனுப்பி வைக்கிறார் அவரது தந்தை. சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு, வெளிநாட்டிலிருந்து குணமாகி திரும்பும் மணி சாலையின் ஓரத்தில், மனநலம் பாத்திக்கப்பட்ட நிலையில் பரிதாபமான கோலத்தில் செல்வியை காண்கிறார். செல்வியை பற்றி மணி அங்கிருந்த சிலரிடம் விசாரிக்கிறார். அவர்கள் இவ்வளவு கேட்கிறீர்களே உங்கள் பெயர் என்ன என்று கேட்கும்போது மணி என்கிறார்.
மணி என்ற பெயரை கேட்டதும் செல்வி அதிர்ச்சியில் இறந்துவிடுகிறார். அங்கிருந்து செல்லும் மணி தன் கையில் பச்சை குத்தியுள்ள செல்வி என்ற பெண் தான் தன் கண்முன் இறந்ததை அறியாமல், அப்பெண்ணினை தேட செல்லும் பொழுது படம் முடிகின்றது.
காதலை ஒரு புதிய பரிமாற்ற கோணத்தில் சொல்ல முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ராகவேந்திரா. மணியாக வரும் அருண், மற்றும் முதல் முறையாக நடித்த விலாசினி இருவரின் நடிப்பும், பாராட்டுக்குரியது. மேலும் நம்மை உருகவைப்பதில் பின்னணி இசைக்கும், பாடலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
அனைவரின் பாராட்டை பெற்ற இப்படிக்கு மணி திரைப்படம், வெள்ளித்திரையிலும் வெளிவந்து வெற்றிபெற பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications