மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படத்தில், தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநர் சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்கத்தில் உருவான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மிகவும் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளிவந்த இந்த படம் வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று திரையரங்குகளில் தாறுமாறாக ஓடியது. குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடலை படக்குழு படத்தில் பயன்படுத்தி இருந்தனர். படம் தொடங்கும் போதே இந்த பாடலை ஒளிபரப்பி தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்துவிட்டார் இயக்குநர்.

ரூ.200 கோடி வசூல்: மலையாளத்தில் சக்கைபோடு போட்ட இப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சக்கைப்போடு போட காரணமே அந்த பாடல் தான். கொடைக்கானால் மலையை சுற்றியும், 11 நண்பர்களை வைத்து மட்டுமே படத்தை இயக்கிவிட்டு பல கோடியை அள்ளிவிட்டார் இயக்குநர். படம் வெளியான போது கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இதை போல, ரஜினிகாந்த், சிம்பு என பலரும் படக்குழுவினரை பாராட்டினர். நண்பர்களுக்குள் இருக்கும் காதலை சொன்ன விதம் தனக்கு பிடித்து இருந்தது என்றும், இந்த படத்திற்கு பிறகு கண்மணி அன்போடு காதலன் பாடலின் மீதான கண்டோட்டமே மாறிவிட்டது என்று சிம்பு படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது.
ஏமாற்றிவிட்டார்: இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு அவர் பணத்தை சொன்னபடி தரவில்லை. மேலும், படத்திற்காக ரூ.7 கோடியை கொடுத்தேன் அந்த பணத்தைக்கூட திருப்பி தரவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்: இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு எர்ணாகுளம் நீதிமன்றம் மூலம் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து,படத்தின் தயாரிப்பாளர்கள் சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











