இயக்குநர் ஏ.எல்.விஜய் கையில் மதுக்கிண்ணம்? காரை தாக்கிய போதை ஆசாமி..இறுதியில் நடந்தது என்ன?
சென்னை: எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை, அது கிரீன் டீ, வேண்டும் என்றால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று இயக்குநர் ஏஎல் விஜய் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகனான ஏஎல் விஜய், ஆரம்பத்தில் விளம்பர படங்களை இயக்கி வந்தார். அதன் பின்னர் இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக வேலைப்பார்த்தார். இதையடுத்து அஜித், த்ரிஷா நடித்த க்ரீடம் படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். அந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அந்த படத்தைத் தொடர்ந்து, பொய் சொல்லப் போறோம், ஆர்யாவின் மதராசப்பட்டிணம், விக்ரம் நடித்த தெய்வ திருமகள், தாண்டவம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இதில், தெய்வ திருமகள், தலைவா படங்களை இயக்கும் போது, ஏஎல் விஜய் - அமலா பால் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின் இயக்குநர் ஏஎல் விஜய் ஐஸ்வர்யா என்பவரை 2019ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது ஒரு மகன் இருக்கிறார். அதேபோல், அமலா பாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: ஏஎல் விஜய் கடைசியாக மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற படத்தை எடுத்தார். பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் அடுத்த படத்தை இயக்கும் வேலையில் இருக்கிறார்.

போதை ஆசாமி காரை தாக்கினார்: இந்த நிலையில், நேற்று ஏஎல் விஜய் மற்றும் மேனேஜர் ஹரி மற்றும் உதவி இயக்குநர் மூன்று பேரும் சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, தவறான பாதையில் பைக்கில் வந்த அந்த ஆசாமி காரின் கண்ணாடியை உரசியபடி சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஏ.எல்.விஜய்யின் காரை ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு உள்ளே இருந்த விஜய் மற்றும் அவரது மேனேஜர் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதுகுறித்து ஏ.எல்.விஜய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய அந்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
அது கிரீன் டீ: இந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் பரவியது, ஆனால் காருக்குள் இருக்கும் விஜய்யின் கையில் மதுபானம் இருந்திருக்கிறது. விஜய்யின் மேல் தான் தவறு இருக்கும் என்று செய்திகள் பரவியது. இதற்கு விளக்கம் கொடுத்த ஏஎல் விஜய், எனக்கு காலையில் கிரீன் டீ குடிக்கும் பழக்கம் இருக்கிறது. காலையில் நேரமாகி விட்டதால், காரில் கிரீன் டீ குடித்தேன். மேலும், எனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை. தற்போது, அந்த கப்பை போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன், வேண்டுமானால் நான் அனைத்து பரிசோதனைக்கும் தயார் என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











