இவரை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்..அதிக தேசிய விருது, அதீத திறமை..கமல்ஹாசன், ரஜினி வழியில் தனுஷ்
சென்னை: தமிழ் நடிகர்களில் அதிக தேசிய விருது வாங்கிய நடிகர் என கமல்ஹாசனை சொல்லலாம், அவருக்கு அடுத்து நடிகர் தனுஷ் வாங்கியுள்ளார்.
தமிழ் திரைப்பட நடிகர்களில் யதார்த்த நடிப்புக்கு சொந்தக்காரராக தனுஷ் இருக்கிறார். இதற்காக 2 முறை தேசிய விருதையும் வென்றுள்ளார்.
இன்று அவரது பிறந்த நாள், பன்முக திறமைப்பெற்ற நடிகர் தனுஷ் ஹால்வுட்டிலும் கால் பதித்துள்ளார்.

கதாநாயக மரபை உடைத்த எம்ஜிஆர், சிவாஜி
தமிழ் திரையுலகின் கதாநாயகன் என்பதற்கு பல தகுதிகள் எதிர்பார்க்கப்பட்டது ஒரு காலம். சடைமுடியுடன் பாகவதர் கிராப் வைத்து நன்றாக பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு தகுதி இருந்தால் தான் கதாநாயகன் என்று இருந்ததை எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் நடிக்க வந்தபோது சடைமுடி வேண்டுமானால் இருக்கட்டும் பாடுவது கஷ்டம் என்று பின்னணி பாடல்களை பின்னணியில் பாட வைத்தனர். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் கதாநாயகர்கள் வெள்ளையாக இருக்க வேண்டும் சுருட்டை முடியுடன் இருக்க வேண்டும் போன்ற பல விஷயங்கள் ஹீரோக்களுக்கு தகுதியாக பார்க்கப்பட்டது.

ரஜினி உடைத்த கதாநாயக பிம்பம்
இதை உடைத்தவர் நடிகர் ரஜினிகாந்த் எனலாம் என்பதுகளில் அவர் அறிமுகம் ஆன பொழுது கருத்த உருவத்துடன், பரட்டை தலையுடன் வில்லனாக, சாதாரண நடிகராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உச்ச நட்சத்திரமாக விளங்கினார். ரஜினிகாந்தை பின்பற்றி விஜயகாந்த், முரளி, பார்த்திபன் என பல நடிகர்கள் வந்தனர். ரஜினியின் ஸ்டைல் தமிழக ரசிகர்களின் பெரிய விருப்பமாக மாரிப்போனது. உச்ச நட்சத்திரமாக தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ஒடிசல் உருவமும் கதாநாயக் இலக்கணம் படைத்த தனுஷ்
கதாநாயகர்கள் கருப்பாக பரட்டை தலையுடன் இருந்தாலும் இளைஞர்களுடைய தோற்றத்துடன் இருந்தனர், அதையும் மாற்றி பள்ளிப்பருவ மாணவன் தோற்றத்துடன் ஒல்லியான ஒருவர் கதாநாயக அந்தஸ்தை உடைத்து முன்னேறினார். அவர்தான் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் சிறுவனாக இருந்த தனுஷ் அறிமுகமானார் அவரைப் பார்த்தவர்கள் கேலி கிண்டல் செய்தனர். இதற்காக ஒரு படத்தில் "என்னை பார்த்தவுடன் பிடிக்காது பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்" என்ற வசனம் வைத்திருப்பார்கள். அது அவரது வாழ்க்கையில் உண்மையானது. தனுஷை பார்க்கப்பார்க்க பிடித்து போனது இன்று அவரைப்பிடித்துப்போய் ஹாலிவுட் வரை அவர் சென்றுவிட்டார்.

20 ஆண்டுகளில் உலக அளவில் சென்ற வளர்ச்சி
ஆரம்பத்தில் சாதாரணமாக நடிகராக இருந்த தனுஷ் அவரது வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில் திரும்பி பார்க்கும் பொழுது அசுர வளர்ச்சி ஆக இருக்கிறது பள்ளி மாணவனாக சாதாரண பத்தோடு பதினொன்று நடிகராக வந்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் முக்கிய நடிகரின் மருமகன் ஆனது அவரை திரும்பி பார்க்க வைத்தாலும், அவரது தனித்திறமை பல முக்கிய இயக்குனர்கள் படத்தில் நடித்து, சிறப்பான கதாபாத்திரங்களை எடுத்து, சவாலான கதாபாத்திரங்களை எடுத்து நடித்தது அவரை உச்சத்திற்கு கொண்டுச் சென்றது. இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார்.

கடின உழைப்பு தனுஷுக்கு ஹாலிவுட் பாதையை தந்தது
தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சமுதாய அக்கறை உள்ள படங்களை எடுத்து அதன் மூலம் இரண்டு தேசிய விருதுகளை தயாரிப்பாளராக பெற்றார் தனுஷ். எட்டிப்பிடிக்க முடியாத யாரும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வளர்ச்சியை அடைந்திருக்கும் தனுஷ், தற்போது ஹாலிவுட் படத்தில் கௌரவத் தோற்றத்தில் கால் பதித்துள்ளார் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இது அவரது கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

வித்தியாசமான திரைப்படங்களில் சாதித்த தனுஷ்
தனுஷின் திரைப்பட வாழ்க்கையில் பல படங்கள் வெற்றி அடையாமல் போனாலும் அவர் குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது சாதாரண நடிகராக வலம் வந்தவர் தனது அண்ணன் செல்வராகவன் எடுத்த புதுப்பேட்டை படத்தில் அரசியலில் ஈடுபடும் ஒரு இளைஞனாக ரவுடியிசத்தை கையில் எடுக்கும் இளைஞனாக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது மாற்றங்களை மிக அழகாக காட்டியிருப்பார் இது அவரது நடிப்புக்கு எடுத்துக்காட்டு.

2 சிறந்த நடிகர் உள்ளிட்ட 4 தேசிய விருதுகள்
அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது தொடர்ந்து புது இயக்குனர்கள் நடிப்பில் தனுஷ் நடித்து வந்தார் இந்த காலகட்டத்தில் தனது சொந்தத் தயாரிப்பில், வெற்றிமாறனுடன் இணைந்து காக்கா முட்டை படத்தை தயாரித்தார். அதற்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல் விசாரணை படத்தை தயாரித்தார் அதற்கும் தேசிய விருது கிடைத்தது. தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு நடித்த ஆடுகளம், 2018 ஆம் ஆண்டு நடித்த அசுரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். கமல்ஹாசனுக்கு அடுத்து அதிக தேசிய விருதுகளைப்பெற்ற நடிகர் தனுஷ் தான்.

பன்முக திறமைக்கு சொந்தக்காரர் தனுஷ்
தனது நடிப்புத்திறமை மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதில் தனுஷுக்கு ஆர்வம் அதிகம். அவரது குரல்வளம் அனைவரும் ரசிக்கும் ஒன்று அதற்காக 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து தற்போதுவரை பாடல்கள் பாடி வருகிறார். அவரது ஒய் திஸ் கொல வெறி பாடல் முதன் முதலில் யூடியூபில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடலாக இருந்தது. இன்றுவரை 33.3 கோடிபேர் அதை பார்த்து ரசித்துள்ளனர். கமலுக்கு அடுத்து அதிக பாடல் பாடிய நடிகரும் தனுஷ் எனலாம். பாடல் தவிர இயக்கம், பாடல் எழுதுவது, திரைக்கதை என பன்முக திறமை கொண்டவர் தனுஷ்.

ஹாலிவுட்டில் ரஜினிக்குப்பின் கால் பதித்த கதாநாயகன்
தமிழகத்தின் உச்ச நட்சத்திரம் ரஜினிபோல் போல் தனுஷும் பாலிவுட்டில் கால் பதித்துள்ளார், ஹாலிவுட்டுக்கும் சென்றுவிட்டார். ரஜினி வழியில் அவர் ஹாலிவுட் சென்றுள்ளார். அடுத்தும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். சாதாரண இளைஞர் அவரது எதிர்பார்ப்பு சினிமா அல்ல ஆனால் சினிமாவில் கால் பதித்து கால் நூற்றாண்டு காலம் வியத்தகு இடத்தை தனுஷ் அடைந்துள்ளார். இன்னும் அவர் செல்லவேண்டிய தூரம் அதிகம் உள்ளது. சமூக அக்கறையுள்ள படங்கள் வெளிவரவும் வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட வாழ்க்கை சோகத்தை மீறி நடிப்பில் கவனம்
தனுஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய நடிகரின் மருமகன், இரண்டு ஆண் மகன்களுக்கு தந்தை. ஆனால் கடந்த ஆண்டு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் புயல் அடித்தது. அவர் திருமண வாழ்க்கையில் பிளவு வந்தது. மணமுறிவு செய்வதாக தனுஷ் ஐஸ்வர்யா பரஸ்பரம் அறிவித்தனர். இதனால் ரஜினி ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இருவரும் தனித்து வாழ்கின்றனர். தன் வாழ்வின் சோகங்களை கடந்து தனுஷ் சாதித்து வருகிறார். விரைவில் அவர் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படம் வர உள்ளது. வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களும் வர உள்ளன.


Click it and Unblock the Notifications











