இது வெறும் அரசியல் கதை அல்ல..’ தலைவி’ குறித்து ஏ.எல்.விஜய் பெருமிதம் !
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பெயர் இருக்கு ஜெயா
இப்படத்தின் டிரைலர் கங்கனா ரணாவத்தின் பிறந்த நாளான நேற்று வெளியானது. அதில் அரசியலுக்கு வா எனபதில் டிரைலர் தொடங்கி, பாஞ்சாலிக்கும் இது தான் நடந்துச்சு, புடவையை இழுந்து அவமான படுத்துத்துனவங்களோட கதையை முடிச்சி கூத்தல முடிச்சா.. அந்த மகாபாரதத்திற்கு இன்னொரு பெயர் இருக்கு அது ஜெயா...என ஆக்ரோஷமாக முடிகிறது டிரைலர் இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கண்கலங்கினார்
முன்னதாக தலைவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கனா ரணாவத், ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை எந்த இயக்குனர்களும் மரியாதையாக நடத்தியது இல்லை என்று கூறி கண்கலங்கினார். இந்த கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த அவருக்கு பல நன்றிகள் என்று கூறினார்.

ஆணாதிக்க சமுதாயத்தில்
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.எல்.விஜய்,தேசிய விருது பெற்ற கங்கனா ரணாவத்துடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இவர் இப்படத்திற்காக உடல் எடையை கூட்டியும் குறைத்தும் மிகவும் சிரமப்பட்டார். கதையின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார். இப்படத்தை வெறும் அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூதாயத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையைப் பற்றிய படமாக இப்படம் நிச்சயம் இருக்கும் என்று கூறினார்.

கூடுதல் பலம்
மேலும் பேசிய அவர், இப்படத்தின் பலமே அரவிந்த சாமி அவர்கள் தான் அவர் இப்படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்றார். ஜீவி பிரகாஷின் இசை கூடுதல் பலம், மதன் கார்க்கி, அஜயன் பாலா, சமுத்திரக்கனி, ஆகியோர் இந்த படத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications











