கமல் மட்டும் கையில் கிடைச்சா.. உரலில் வைத்து குத்துவேன்.. முதல் எதிரியே அவர்தான்.. பெண் ஆதங்கம் ஏன்?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தக் லைஃப். இந்த படம், வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்விப் படமாக மாறியுள்ளது என்ற பேச்சு திரைத்துறையில் அடிபடுகிறது. படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்தும் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தனது சொந்த வாழ்க்கையில் நடிகர் கமல்ஹாசன் தனக்கு எந்த அளவிற்கு பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது அவர் அதில் கூறியது, அவரது கணவர் தீவிர கமல்ஹாசன் ரசிகர் என்பதால் திருமண வாழ்க்கையில் கமல்ஹாசனுக்காக அவரது கணவர் செய்த செயல்கள் அவர்களின் சொந்த வாழ்க்கையில் என்ன மாதிரியான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது என்பது குறித்து விளாவரியாக கூறியுள்ளார். மிகவும் சிரித்த முகத்துடன் அவர் சொல்லும் விதமும் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களும் ரசனையாக இருப்பதால், அவர் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முதல் எதிரி கமல்: அதாவது, " வாழ்க்கையில் எனது முதல் எதிரி என்றால் அது கமல்ஹாசன் தான். இன்றைக்கு கையில் கிடைத்தாலும் இஞ்சி உரலுக்குள் வைத்து நங்கு நங்கு எனக் குத்தி விடுவேன். ஏனென்றால் எனது கணவர் மிகப்பெரிய கமல்ஹாசன் ரசிகர். எனது திருமணம் முடிந்து நான் முதன் முதலாக வீட்டிற்கு போகும்போது நான் கடவுளின் புகைப்படத்தை பார்க்க வில்லை, நான் பார்த்தது மரியாதைக்குரிய கமல்ஹாசன் அவர்களின் புகைப்படம் தான்.
பெட் ரூம் எல்லாம்: எனது பெட் ரூம் எல்லாம் கமல்ஹாசன் தான் இருப்பார். எனது கல்யாண வீடியோவில் எல்லா பாடல்களும் கமல்ஹாசன் பாடல்கள் தான். திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே நான் கர்ப்பமாகிவிட்டேன். தலை தீபாவளி என்பதால் எங்கள் வீட்டில் இருந்து வந்து அழைத்துச் சென்றுவிட்டார்கள். அந்த காலகட்டத்தில் குருதிப்புனல் படம் வெளியானது. இரண்டு நாட்கள் எனது கணவர் வீட்டிற்கே வரவில்லை. மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவர்கள் தாடி வளர்த்துக் கொள்வார்கள். நான் வீட்டில் வாந்தி எடுத்துவிட்டு களைப்பில் படுத்து கிடக்கிறேன். யாரோ உள்ளே வந்து வெளியே செல்கிறார்கள் என்று தெரிகிறது, ஆனால் என்னால் அது யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நன்றாக உத்துப் பார்த்தால் அது என் புருஷன். தாடி, மீசையோடு போன மனிதன், குருதிப்புனல் படத்தின் கெட்டப்பிற்காக தாடி, மீசையெல்லாம் எடுத்து மொழுக்கட்டையாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வந்தார்" என்று பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் கமெண்ட்: அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமல்ஹாசனின் ரசிகர்கள் மிகவும் ஆனந்தமாக கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதாவது, அவரு தாடி மீசை வெச்சதே சத்யா படத்தை பார்த்து தான் வெச்சிருப்பாரு, நம்மை விட பெரிய ரசிகரா இருக்காரே. என்னைப்போல் இன்னொருவர், அன்பு தான் காரணம்.. அன்பின் மேல் ரொம்ப அன்பு... அன்பே கமல் என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











