மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட பிரபலங்கள்... பிரியா விடைபெற்ற மக்கள் கலைஞன்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
57 வயதான மயில்சாமியின் உயிரிழப்பு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து மயில்சாமியின் உடல் தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரை பிரபலங்களும் ரசிகர்களும் திரளாக பங்கேற்றனர்.

மயில்சாமியின் இறுதி ஊர்வலம்
மிமிக்ரி கலைஞர், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் மயில்சாமி. கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த அவர், நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி, 1984ம் ஆண்டு வெளியான தாவணி கனவுகள் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, கன்னிராசி, என் தங்கச்சி படிச்சவ, கமலின் அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா, பணக்காரன், உழைப்பாளி உட்பட பல படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். விஜய், அஜித், தனுஷ், விக்ரம், விஜயகாந்த், சத்யராஜ் உட்பட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள்
வடிவேலு, மறைந்த விவேக் ஆகியோருடன் மயில்சாமி நடித்த காமெடி காட்சிகள், ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றன. நடிகராக மட்டும் இல்லாமல் பலருக்கும் உதவும் நல்ல மனிதனாகவும் விளங்கினார் மயில்சாமி. இந்நிலையில், நேற்றில் இருந்து இன்று காலை வரை ஏராளமான திரை நட்சத்திரங்கள் மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினியும் மயில்சாமியின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டிக் கொடுத்தார். இதனையடுத்து நடைபெற்ற மயில்சாமியின் இறுதி ஊர்வலத்திலும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள மின் மேடையில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த இறுதி ஊர்வலத்தில் மனோபாலா, ஆதவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய மயில்சாமியின் இறுதி ஊர்வலம், சிவாலய வாத்திய இசைக் கருவிகள் இசைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் மயில்சாமியின் உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், 12.30 மணியளவில் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அதன்பின்னர் தகனம் செய்யப்பட்டது

இறுதி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்
மறைந்த மயில்சாமிக்கு கீதா என்ற மனைவியும், யுவன், அன்பு என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏவிஎம் சுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் மயில்சாமியின் மகன் யுவன் தனது தந்தையின் உடலுக்கு தீ மூட்டினார். இதனைப் பார்த்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர் மல்க மக்கள் கலைஞன் மயில்சாமிக்கு இறுதி விடை கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications











