ஆர்.எஸ்.எஸ். பற்றி ரூ. 180 கோடியில் மெகா படம்: திரைக்கதை யார்னு தெரிந்தால் ஆடிப்போயிடுவீங்க ஆடி
Recommended Video

டெல்லி: ரூ. 180 கோடியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பு பற்றி பிரமாண்ட படத்தை எடுக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அருமை பெருமையை உலகிற்கு தெரிவிக்க படம் எடுக்கிறார்களாம். அதுவும் ரூ. 180 கோடியில் மெகா படமாக எடுக்கிறார்கள்.
படத்திற்கான திரைக்கதையை எழுத இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாதை அணுகியுள்ளனர்.

திரைக்கதை
பிரபாஸ் நடித்த பாகுபலி படத்திற்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் ஆர்.எஸ்.எஸ். படத்திற்கும் திரைக்கதை எழுதிக் கொடுத்துள்ளார். அதை படித்துப் பார்த்து ஓகே சொல்லியிருக்கிறார் ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத்.

பாகுபலி 2
பாகுபலி 2 படம் ஹிட்டானதை பார்த்த கன்னட சினிமா ஆடியோ ஜாம்பவானான லாஹரி வேலு துளசி நாயுடு ஆர்.எஸ். எஸ். பற்றி படம் எடுத்தால் என்ன என்று ஐடியா கொடுத்திருக்கிறார். வேலு பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடியா
பாகுபலி 2 ரிலீஸான பிறகு நான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தபோது தான் ஆர்.எஸ்.எஸ். பற்றி படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியா வந்தது. உடனே என் மேனேஜருக்கு போன் செய்து ஆர்.எஸ்.எஸ். பக்வா த்வாஜ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய தலைப்புகளை பதிவு செய்யுமாறு கூறினேன் என்கிறார் வேலு. ஆர்.எஸ். எஸ். படத்தின் தயாரிப்பாளர்களில் வேலுவும் ஒருவர்.

திரைக்கதை
நானும், பிரசாத்தும் சேர்ந்து குருமூர்த்தியை சந்தித்தோம். அவர் திரைக்கதையை தயார் செய்ய உதவி வருகிறார். பிரசாத் 27 பேர் அடங்கிய குழுவுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இயக்குனரை இன்னும் தேர்வு செய்யவில்லை என்று வேலு தெரிவித்துள்ளார்.

சந்திப்பு
பிரசாத் உள்ளிட்டோர் மோகன் பகவத்தை 3 முறை சந்தித்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கதையை அவரிடம் அளித்துள்ளனர். திரைக்கதையை பார்த்துவிட்டு பகவத் மகிழ்ச்சி அடைந்ததாக வேலு கூறியுள்ளார்.

தெலுங்கு
ஆர்.எஸ். எஸ். பற்றிய படம் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரிலீஸாகுமாம். தேர்தலுக்கும், பட ரிலீஸுக்கும் தொடர்பு இல்லையாம். படம் இந்தி, தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகிறது. படத்தின் விளம்பரம், வினியோகம் ஆகியவற்றை கவனித்துக் கொள்ள ஜீ குழுமத்தின் சுபாஷ் சந்திரா மற்றும் மோஷன் பிக்சர்ஸின் ராஜ் சிங் ஆகியோரின் உதவி நாடப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











