கிரிக்கெட் வீரரை சந்தித்த அஜித்.. கேக்கெல்லாம் ஊட்டுறாரே.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் ஏப்ரல் 10ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஜித் கேக் ஊட்டிவிடும் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கியிருக்கிறார். இந்த முறை உலகத்தை சுற்றாமல் இந்தியாவை சுற்றிவருகிறார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
அப்டேட் எப்போ பாஸ்: அந்தப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் மறுபக்கம் விடாமுயற்சியின் நிலை என்னதான் ஆச்சு என்று விரக்தியுடன் கேள்வி கேட்டுவருகின்றனர். ஏனெனில் லைகாவுக்கு பண பிரச்னை வந்துவிட்டது அதனால் ஷூட்டிங் தடைபட்டிருக்கிறது, திரிஷா படத்திலிருந்து விலகிவிட்டார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை கலக்கமடைய செய்தன. எனவே ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி எழுந்தது.
மீண்டும் ஷூட்டிங்?: சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி லைகாவுக்கு நேர்ந்த பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன எனவே ஏப்ரல் 10ஆம் தேதி மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒரேகட்டமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை முடிக்கும்படி அஜித் கேட்டுக்கொண்டதாகவும்; அதற்கேற்றபடி மகிழ் திருமேனி ஷெட்யூலை பிளான் செய்திருக்கிறார் என்றும் கோடம்பாக்கத்தில் குரல்கள் கேட்கின்றன.
நடராஜனுடன் சந்திப்பு: முக்கியமாக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கை ஜூனில் தொடங்குவதற்கு அஜித்குமார் திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில் ஹைதராபாத்துக்கு சென்றார் அஜித். இதற்கிடையே தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அஜித்தும், நடராஜனும் சந்தித்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக்கை நடராஜனுக்கு அஜித் ஊட்டிவிட்டார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











